தியாக தீபத்தை நினைவேந்திய குற்றத்துக்காக சிறிலங்கா இனவாதக் காவல்துறையினரால் தாக்கிக் கைதுசெய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். எதிர்வரும் 27ம் திகதி யாழ் நீதிமன்றில் இவர்கள் மீது வழக்குத் தொடரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னரே பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
அதேவேளை யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க யாழ்ப்பாண பொலிஸார் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.