தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புப் போரின்போது தமிழ்மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரனையை உலகத்தமிழர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கையில் சிறிலங்கா அரசுடன் இணைந்து உள்ளக விசாரனை பொறிமுறை ஒன்றினை உருவாக்க ஐ.நா. சபை திட்டமிட்டுள்ளமை அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்பதை ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள ஆவணம் ஒன்று ஏற்படுத்தியுள்ளதாக சனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சிங்கள தேசத்தில் ஏற்பட்டிருந்த ஆட்சி மாற்றத்தினை காரணம்காட்டி அமையப்பெற்றுள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டிய விசாரனை அறிக்கையினை வரும் செப்டெம்பரிற்கு ஒத்திவைத்திருந்தது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை.
ஏற்கனவே ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் என்றோ கிடைத்திருக்க வேண்டிய நீதிக்காக தமிழர்களாகிய நாம் காத்திருக்கையில் ஆறு மாதங்கள் ஒத்திவைப்பும் எம்மீது வலிந்து திணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செப்டெம்பரில் வெளிவரவுள்ள விசாரனை அறிக்கை குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ஏமாற்றத்தினையும் தந்துள்ளது. தொடர்ந்தும், பாதிக்கப்பட்ட தரப்பான எமது அபிலாசைகளைப் புறக்கணித்து பாதிப்பினை ஏற்படுத்திவரும் சிங்கள அரசிற்கு சார்புடையதான போக்கில் ஐ.நா.மன்றம் செயற்படுவதானது நீதியின் மாண்பினை கேள்விக்குள்ளாக்குவதாகவே அமைகின்றது.
நீதிக்குப் புறம்பாக சிறிலங்கா அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு தமிழர்களின் முதல்வரான பெருமதிப்பிற்குரிய நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் மீது ஐ.நா.மன்றத்தில் இருந்து அழுத்தம் பிரயோகிக்கப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அறவழி, ஆயுதவழி, அரசியல்வழிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர் ஐ.நா.மன்றத்தின் நீதி விசாரனையில் நிலைகுத்தி நிறுத்தப்பட்டுள்ளதென்றால் சர்வதேச சமூகத்தின் மீது நாம் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடேயாகும்.
எம்மை அழித்தொழித்து அடிமைப்படுத்தி அடக்கியாள நினைக்கும் சிங்களத் தரப்பின் நலன்களை முன்னிறுத்தி எமக்கான நீதி தொடர்ந்தும் திட்டமிட்டு மறுக்கப்பட்டு வருவதனை எக்காரணம் கொண்டும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நேற்றே எமக்கு கிடைத்திருக்க வேண்டிய நீதியானது இன்றே கிடைத்தாக வேண்டும். இதுவே எமது இறுதியானதும் உறுதியானதுமான நிலைப்பாடாகும்.
நீங்கள் எமக்கான நீதியை தரமறுத்தாலும் நாம் தொடர்ந்தும் நீதிக்கான கதவை தட்டிக்கொண்டே இருப்போம். ஏன் என்றால் கேட்கும் இடத்தில் நாங்கள்(தமிழர்கள்) இருக்கின்றோம். கொடுக்கும் இடத்தில் நீங்கள்(சர்வதேச சமூகம்) இருக்கின்றீர்கள்.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.