பல்வேறு அழிவுகளையும் அனர்த்தங்களையும் சந்தித்த வடக்கு மாகாணம், கல்வியில் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற எண்ணம் எல்லோர் மனங்களிலும் துளிர்விட்ட நிலையில் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் போக்குகளும் தற்போதைய பதில் மாகாணக்கல்விப் பணிப்பாளரின் திட்டமிடப்படாத நடைமுறைகளும் அழிவுப்பாதைக்கு கல்வியை தள்ளத் தொடங்கியுள்ளது என எச்சரித்துள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், இவை சீர்செய்யப்படாவிடின் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் முன்பாக தொடர் போராட்டங்களை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச் செய்திக் குறிப்பில், குறிப்பாக 2014ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் எதனையும் திட்டமிட்டுச் செய்யாமையால் ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பாலானவை மீளவும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் எஞ்சியுள்ள நிதியை பயன்படுத்துவதற்கு திட்டங்கள் எதுவும் இல்லாமல் அவசர அவசரமாக பொருட்களின் கொள்வனவுகள் இடம்பெறுவதாக அறியப்படுகின்றது.
உலக வங்கியால் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதிக்குரிய செயற்றிட்டங்கள் வெற்றிகரமாக முடிக்கப்படும் பட்சத்தில் மேலதிக போனஸ் நிதியும் மாகாணங்களுக்கு வழங்கப்படுவது வழமையாகும். இதனை ஏனைய மாகாணங்கள் சரியாகப் பயன்படுத்துவதனையும் போனஸ் தொகையைப் பெற்றுக் கொள்வதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஆனால் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் எந்தவிதமான முன்னேற்றங்களுமின்றி ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட கோட்டைவிடும் அளவிற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளமை வேதனை தரும் விடயமாகும்.
இன்னுமொருபுறம் வருடாந்த ஆசிரிய இடமாற்றங்கள் தாபன விதிக்கோவையின் பிரகாரம் ஒக்டோபர் மாதம் முழுமைப்படுத்தப்பட்டு அடுத்த வருடம் ஜனவரி 01ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவேண்டும். ஆனால் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் அப்படியானதொரு நடைமுறை இல்லை. இன்று வரை அவை முழுமைப்படுத்தப்படாமல் அவசர அவசரமாக ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இடமாற்ற சபை கூடி ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஆசிரிய தொழிற்சங்கங்களுக்கு இடமாற்றப் பட்டியல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந் நடவடிக்கை தேர்தல் சட்ட நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானதாகும். இவை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது. வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இருந்த செல்வராஜா ஓய்வுபெற்ற பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவை கிடப்பில் உள்ள நிலையில் பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளராக இராஜேந்திரம் கடமையாற்றுகின்றார்.
அங்குள்ள அதிகாரிகளிடம் எந்தத் தகவலைக் கேட்டாலும் தெரியாது என்றே சொல்லுகின்றனர். வடக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களிலுள்ள தற்போதைய மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை எதுவுமே தெரியாத அளவுக்கு கணக்கெடுப்புகள் ஸ்தம்பித்த நிலையிலுள்ளன. இவ்வருடம் ஜூன் மாதத்திற்குப் பிறகு எந்தவிதமான கணக்கெடுப்புகளும் நடைபெறவில்லை. மாறாக உள்ள பணத்தைச் செலவழிப்பதற்கு வழிகளைத் தேடியவராகவே பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளார். இதைவிட வேடிக்கை என்னவெனில், ஆசிரிய பற்றாக்குறைகள் பற்றி பலரும் பலவாறு பேசியவண்ணமுள்ளனர். அவைபற்றி இன்னும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் தீர்க்கமான முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை.
கடந்த ஒக்டோபர் மாதம் வடமாகாணக் கல்வி அமைச்சு செயலாளரால் நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்பான முடிவுகள் இன்னும் வலயங்களுக்கு அனுப்பப்படவில் லை.
தற்போதைய நிலையில் வடக்கு மாகாணத்திலுள்ள கற்பித்தல் பணியில் ஆசிரியர்களின் எண்ணிக்கை 14ஆயிரத்து 403 ஆகும். ஆனால் தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 708 ஆகும். இன்னும் வடக்கு மாகாணத்திற்கு கற்பித்தல் பணிக்காக 305 ஆசிரியர்கள் தேவை என்பதை ஜூன் மாதக் கணிப்பீட்டின் மூலம் அறியப்படுகின்றது. அதன் பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை இதற்குள் அடங்கவில்லை.
இவ்வாறு ஆசிரிய பற்றாக்குறை உள்ள நிலையில் விடுபட்ட தொண்டர் ஆசிரியர்களும், பகுதிநேர ஆங்கில ஆசிரியர்களும் சரியான தகைமைகளுடன் காத்திருக்கின்றனர். ஆனால் ஆங்கில ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை தொடர்ந்த வண்ணமுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கான நியமனங்களை வழங்கியாவது அதனை நிவர்த்தி செய்ய முடியும். அவ்வகையில் கணிப்பீடுகளைக்கூட மாகாணக் கல்விப்பணிப்பாளர் இன்னும் செய்யவில்லை. ஆளணி வெற்றிடத்திற்குத் தேவையான ஆசிரியர்களை தெரிவுசெய்யும் வேலையை வடமாகாணக் கல்வி அமைச்சு அதிகாரிகள் நேரடியாக வலயங்களுக்குச் சென்று செய்யுமளவுக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கடமைகள் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
ஒட்டுமொத்தமாக வடக்கு மாகாணத்தின் கல்வியை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் முறைப்படி மாகாணக் கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்படவேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவர் வடமாகாணத்தின் கல்வியில் அக்கறை கொள்பவராக இருக்கவேண்டுமே தவிர ஒதுக்கீடுகளில் அக்கறையுள்ளவராக இருக்கக்கூடாது. அத்தோடு அனைவரினதும் ஆலோசனைகளைக் கேட்டு முடிவுகளைச் சரியாக எடுக்கக்கூடியவராக இருக்க வேண் டும். முயலுக்கு மூன்று கால்கள் என்பவரை சமாளிக்கலாம். ஆனால் ஒருகால் தான் உள்ளது என்ப வரைச் சமாளிக்கவே முடியாது என ஒரு அதிகாரி விசனப்பட்டதனை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் மாகாணக் கல்விப்பணி ப்பாளரின் நியமனம் முறைப்படி நடை பெறவில்லையெனில் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் முன்பாக தொடர் போர ாட்டங்களை நடத்துவதற்கு நாம் முடிவெ டுத்துள்ளோம் என்றுள்ளது.