மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுக்கடையை அகற்றக்கோரி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று நடத்திய போராட்டத்தால் காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்கள் மீதான இத்தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே இன்று இரவு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது என்றார்.
மேலும் சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அழைப்பு விடுத்துள்ள நாளைய முழு அடைப்புப் போராட்டத்துக்கு தலைமையேற்கும் கட்சி ஆதரவு கோரினால் ஆதரவு தருவது குறித்து பரிசீலிப்போம் என்றும் கருணாநிதி கூறினார். அத்துடன் வரும் 10-ந் தேதி தி.மு.க. நடத்த உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு பிற கட்சிகளிடம் ஆதரவு கோரமாட்டோம்; அதே நேரத்தில் பிற கட்சிகள் ஆதரவு அளித்தால் ஏற்றுக் கொள்வோம் என்றும் கருணாநிதி கூறினார்.