மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் அடித்த ஒவ்வொரு அடியும் ஜெயலலிதா அரசுக்கு விழும் அடி என்று எச்சரிக்கை விடுத்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதா அரசின் ஆயுள் எண்ணப்படுவதாக ஆவேசத்துடன் கூறியுள்ளார். மதுக்கடையை அகற்றக்கோரி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று நடத்திய போராட்டத்தால் காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இதில் ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து கலிங்கப்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாணவ, மாணவிகளை பூட்ஸ் காலால் போலீஸ் உதைத்ததற்கு கண்டனம் தெரிவித்தார். மாணவர்களுக்கு விழுந்த ஒவ்வொரு அடியும் ஜெயலலிதா அரசுக்கு விழும் அடி என்று எச்சரித்த வைகோ, ஜெயலலிதா அரசின் ஆயுள் எண்ணப்படுவதாக ஆவேசத்துடன் கூறினார்.
நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த வைகோ, வகுப்பறையை விட்டு வெளியேறி மதுவுக்கு எதிராக போராட மாணவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மதுக்கடைகளை மூட மாணவர்களால்தான் முடியும் என்று தெரிவித்த வைகோ, பல நாடுகளில் மாணவர்களின் போராட்டம் பல வரலாறுகளை படைத்துள்ளன என்றும், 1965ஆம் ஆண்டு போராட்டம் மீண்டும் திரும்புவதாகவும் கூறினார்.