சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பரப்புரை செய்யப் போவதில்லை என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ள முடிவு தொடர்பாக, தேர்தல் முடிந்த பின்னர் அவருடன் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
“கூட்டமைப்பினர் என்னை வட மாகாண முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர்களது தேர்தல் களங்களில் அக்கட்சி வேட்பாளர்களுக்காக பேசுவது எனக்கு அழகல்ல” என்று கருதுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து பிபிசி தமிழோசைக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தன்,
“இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டியிருக்கும். பரப்புரை செய்தால் விருப்பு வாக்குகளை யாருக்கு அளிப்பது என்பதைச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் விக்னேஸ்வரன் பரப்புரை செய்வதைத் தவிர்த்திருக்கலாம்.
இது தொடர்பாக விக்னேஸ்வரன் என்னிடம் பேசவில்லை. தேர்தலுக்குப் பின்னர் இது குறித்து விவாதிக்கப்படும்” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.