புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் நிலையத்தில் கைவிடப்பட்ட பெட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய கார்த்திகா எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்ந்தும் மர்மமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார்த்திகாவின் சடலம் அவரது தாயாரால் அடையாளம் காட்டப்பட்ட பின்னர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் போது திறந்த தீர்ப்பொன்றே வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
மேலதிக ஆய்வுகளுக்காக சடலத்தின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்பாளர் திணைக்களத்தக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது. இது ஒரு கொலை என சந்தேகிக்கும் பொலிஸார் சந்தேக நபராக அப்பெண்ணின் இரகசிய காதலனை பெயரிட்டுள்ள நிலையில் அவரைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
சி.சி.ரி.வி.கண்காணிப்பு கமராவின் உதவியுடன் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு நகரில் 27 இடங்களில் உள்ள 105 சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமராக்களின் பதிவுகளை இது தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விசேட பொலிஸ் குழு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார். சந்தேக நபரை கைது செய்ய போக்கு வரத்து நிர்வாகம், பிரபுக்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கமராக்களின் பதிவுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அந்த பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்டிருந்த பயணிகள் பொதியொன்றுக்குள் இருந்து அரை நிர்வாணமான நிலையில் கார்த்திகாவின் சடலம் கடந்த புதன் கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
Close