நிதி அமைச்சரும், ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதிமூன்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் 11.45 மணிக்கு இடம்பெற்றுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஆதரவான பிரசாரத்தின் போது பட்டாசு கொழுத்தப்பட்டிருந்த சமயம் இரண்டு ‘ஹைபிரிட்’ சொகுசு கார்களில் வந்த துப்பாக்கி தாரிகள் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம் பவத்தில் அமைச்சர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
கொலன்னாவ பகுதியில் நேற்றுக் காலை நடைபெற்ற போதி பூஜையில் கலந்துகொண்டுவிட்டு, கொட்டாஞ்சேனை புளூமென்டல் பகுதியில் சென்.பெனடிக்ஸ் மைதானத்துக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க வருகை தந்தார். அமைச்சர் அங்கு வந்ததும் மாலை அணிவித்து, பட்டாசு கொளுத்தி வரவேற்பு வழங்கப்பட்டது.
பட்டாசு கொளுத்தப்பட்ட சமயம் பட் டாசு சத்தத்துடன் சத்தமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத் தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட னர். வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட பெண் ஆதரவாளர் ஒருவர் உயிரி ழந்தார். 13ற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். மூவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
வைத்தியசாலைக்கு விரைந்த அமைச்சர் ரவி கருணாநாயக்க காயமடைந்து சிகிச் சைபெற்றுவரும் தனது ஆதரவாளர்களைப் பார்வையிட்டு ஆறுதல் கூறியிருந்தார். சம்பவத்தைக் கேள்வியுற்று அரசியல் பிரமுகர்கள் பலர் வைத்தியசாலை விரைந்தனர்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வர்கள் யார் மற்றும் அவர்கள் வந்த வாக னங்கள் தொடர்பிலான விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் ஆரம்பித் திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளது.
தனது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர்களை கைதுசெய்து உரிய தண்டனை பெற்றுக் கொடுப்பதுடன், இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சகலருக்கும் அறிவித் திருப்பதாக வைத்தியசாலையில் காயம டைந்தவர்களைப் பார்வையிட்ட பின்னர் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
“எம்மை கைப்பற்ற முயற்சித்தாலும், நாட்டை அவர்கள் கைப்பற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது” என அமைச் சர் கூறினார்.
நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மாதம்பிட்டியவை சேர்ந்த சந்தி மஹீமா சித்தி நசீன் என்பவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத் தில் 4 பெண்கள், 9 ஆண்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில், எம்.அஷ்ரப், டேவிட் பிரேரா, ஜே.டி.அபேநாயக்க, சரவணராஜ், சிவகுமார், சரித் இசங்க, இன்பராஜ் ஆகியோர் தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவின் 62ம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், இந்திரானி, எஸ்.இந்திரா, டி.மல்காந்தி ஆகிய பெண்கள் 63ஆவது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் விக்ரமநாயக்க தெரிவித்தார்.
படுகாயமடைந்த சம்பந்த என்ற நபர் தீவிர கண்காணிப்புப் பிரிவிலும் மேலும் இருவர் சத்திரசிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டனர்.
பட்டாசு வெடிக்கும் சமயம் பார்த்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. தாம் அனைவரும் சிதறி ஓடியதால் முட்டிமோதி ஓடும்போது வீழ்ந்ததாகவும், கால்களில் இருந்து இரத்தம் வடிந்ததாகவும் காயமடைந்தவர்கள் தெரிவித்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கால்களில் காயமேற்பட்டிருந்தது.