புலவர் புலமைப்பித்தன் ஐயா அவர்களோடு எமது கல்லூரி காலத்தில் ஏற்பட்ட பிணைப்பு அவரது மரணம் வரை தொடர்ந்தது.
இலயோலா மாணவராக இருந்த காலத்தில் எங்கள் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் எங்களது அழைப்பின் பேரில் வெகு நீண்ட இடைவெளிக்கு பிறகு, (குறிப்பிட்டு சொல்லப்போனால் 1990 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு) மேடையேறி மாணவர்களிடையே உரையாற்றினார்.
கருப்பு ஜூலை கலவரம், தமிழீழ மக்கள் அடைக்கலம், போராளி இயக்கங்கள், புலிகள், தலைவர், எம்.ஜீ.ஆர்., அமைதிப் படையின் அட்டூழியம், 2009 தமிழ் இனப்படுகொலை என ஒரு வரலாற்றை ஆசிரியரைப் போல 2.30 மணி நேரம் எடுத்து முடித்தார்.
அரங்கில் இருந்த நண்பர்கள் ஐயா, ‘ என் தம்பி வருவான் ‘ கவிதையை சொல்லுங்கள் … சொல்லுங்கள்… என கூற அரங்கம் அதிர தன் மீசையை முறுக்கியபடி, ‘ என் தம்பி வருவான்… என் தம்பி வருவான்… நம்பி இருங்கள் தோழர்களே !’ என உரக்க உறுமியது அந்த கிழட்டுப் புலி.
கல்லூரி விட்டு போகும்போது என்னைப் பார்த்து, “செம்பியன் நல்ல கூட்டம்டா… மற்ற தம்பிகளைக் கூட்டிக்கிட்டு வீட்டு வா… நிறைய பேசனும்…” என்றார்.
அவரது ரத்தப் பெயரன் தீலிபனை போலவே இந்த இனத்திற்காக வீதிக்கு வந்த அனைவரையும் அவர் தந்த சொந்த பெயரனாகவே கருதினார். அந்த பெயரப்பிள்ளைகளுள் நானும் ஒருவனாக இருந்தது என் பேரு.
ஈகி அண்ணன் கொளத்தூர் முத்துக்குமாரின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுக்குழுவில் ஐயா புலமைப்பித்தன் தான் தலைமை ஒருங்கிணைப்பாளர். ஆண்டு தவறாது யாரும் அறியாது வந்து செல்லும் ஓர் தலைவர் அவர். முத்துக்குமார் அவரது அரசியல் மாணவர் தானே ?!. கற்றறிந்த மாணவனுக்கு ஆசான் செய்யும் மரியாதை அதுவென நாம் உணராமல் இல்லை.
சென்னை பெரம்பூரில் நாங்கள் நடத்திய மாவீரர் நாள் நிகழ்வில் தலைமை ஏற்று, மாவீரர் நாள் சிறப்பு சுடரேற்றி நா தழுத்தழுக்க அவர் பேசியவை நாக்கில் இருந்து உதித்தவை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்தவை.
எனக்கு அவரது உடலைப் பார்த்து அழ தோன்றவில்லை. அவர் வாழ்வு அழுவதற்கான பாடங்களை ஒருகணமும் சொல்லவில்லை. “என்ன செம்பியன்…?” என அவரது வெண்கலக் குரல் மட்டும் நினைவு அடுக்குகளில் கேட்கிறது.
சுயமரியாதை வாழ்வை, பொதுத் தொண்டை, கறைப்படாத அரசியலை மட்டுமே செப்பின. அவரது நேர்மையை, ஒழுக்கத்தை பேசியபடி வீடு வந்து சேர்ந்தோம்.
“தம்பி… புலிகள்…” என கச்சேரி சாலை வீட்டில் அவர் சொல்லும் வரலாற்றை மீண்டும் மீண்டும் கேட்கும் ஆசை எழுகிறது. ஆனால், இனி அதற்கு வாய்ப்பில்லை.
அந்த ஏழைப் புலவனது, இறுதி ஆசைப்படி புலிக்கொடியோடு புறப்பட்டார். வழி அனுப்பிவிட்டு வந்துவிட்டோம்.
சிவப்பிரியன் செம்பியன்.