சுவிசில் நடைபெற்ற ஈகைப்பேரொளிகள் நினைவுசுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

0
618

சுவிசில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு

தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் கரிக்கி உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது சுவிஸ் ஆர்கவ் மாநிலத்தில் 05.09.2021 அன்று நினைவுகூரப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க  நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில்; இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

தீயினிற் தம்மை ஆகுதியாக்கிய ஈகியர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப்பாடல்கள், கவிவணக்கங்களுடன் எழுச்சி நடனமும் இடம்பெற்றன. அத்துடன் அதே தினத்தில் மாலை வேளையில் ஐ.நா சபை முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலிலும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை இசைக்கலைஞர்களுடன் மக்கள் எல்லோரும் சேர்ந்து பாடி, தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலுடன்;, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வு உணர்வுடன் நிறைவுபெற்றது. 

அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும் என்று தீயில் ஆகுதியாகு முன் ஈகைப்பேரொளி செந்தில்குமரன் எம்முன் விட்டுச்சென்ற பணியை வலுப்படுத்திச் செயற்படுத்த 20.09.2021 அன்று ஐ.நா சபை முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் தமிழர்களாகிய நாம் அனைவரும் அணிதிரண்டு தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்க முரசறைவோம் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உரிமையோடு இத்தருணத்தில்  வேண்டி நிற்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here