அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கும், ஒசாமா பின்லேடனுக்கும் தொடர்பில்லை. அதற்கான ஆதாரமும் இல்லை என்று தலிபான் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், கிட்டதிட்ட 4,500 அமெரிக்கர்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 500 அமெரிக்கர்கள் ஆப்கானில் இருந்து கிளம்பி உள்ளனர். இதுமட்டுமின்றி மற்ற நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அமெரிக்க படை விமானம் மற்றும் இதர விமானங்கள் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர். அமெரிக்காவை பொருத்தமட்டில் சுமார் 1,500 அமெரிக்கர்கள் மட்டுமே இன்னும் ஆப்கானில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘காபூல் விமான நிலையத்தின் வெளிப்புற வாயிலான ஏபி கேட், கிழக்கு கேட் அல்லது வடக்கு கேட் வழியாக அமெரிக்க மக்கள் உடனடியாக வர வேண்டும்.
மற்ற வாயில்களில் செல்ல வேண்டாம். காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.