ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காபூல் விமான நிலையத்தின் ‘அப்பே’ நுழைவாயிலுக்கு அருகில் ஒரு சில துப்பாக்கி வேட்டுகளைத் தொடர்ந்து, இரண்டு குண்டு வெடிப்புகள் அடுத்தடுத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க இராணுவத்தினரை இலக்கு வைத்து இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கலாமெனவும், இது ஒரு தற்கொலைத் தாக்குதல் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் தற்போது அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, தலிபான்கள் காபூல் உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஆப்கான் மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், இதுவரை 80,000 பேர் ஆப்கானை விட்டு வெளியேறியுள்ளதாகவும், மேல் பல ஆயிரக்கணக்கானோர் அந்நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.