திருச்சி சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் – வ.கௌதமன்!

0
464

உயிராபத்து நிகழ்வதற்குள் காலம் கடந்தும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் திருச்சி சிறப்பு முகாம் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வ.கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் வருமாறு:-

கடவுச்சீட்டு வழக்கில் தண்டனைக் காலத்தைத் தாண்டியும் நீண்ட நெடுங்காலமாக சிறையிலிருக்கும் தங்களை விடுதலை செய்யக்கோரி பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்தும் தங்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காத நிலையில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கிற ஈழத்தமிழர்கள் 16 பேர், 18.08.2021 புதன்கிழமை அன்று அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டும், அதில் ஒருவர் தனது வயிற்றைக் கிழித்துக்கொண்டும், இருவர் அங்குள்ள மரக்கிளையில் தூக்கிலிட்டுத் தற்கொலைக்கு முயன்றதுமான துயர நிகழ்வுகளைத் தாங்களும் அறிந்திருப்பீர்கள்.

இந்நிகழ்விற்கு முன்பே, கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதியிலிருந்து ம.நிரூபன் (வயது 27), செ.முகுந்தன் (வயது 26) ஆகிய இருவரும் உணவு அருந்தாமல் தங்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி இன்றோடு பத்தாம் நாளைக் கடக்கிறது.

19.08.2021 வியாழன்று மாலையில் மருத்துவர்கள் அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்தபோது, அவர்களுடைய நாடித்துடிப்பு 50 என்றும் 55 என்றும் காட்டியிருக்கிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதை மருத்துவர்கள் எச்சரித்து சென்றிருக்கிறார்கள்.
ஆனாலும் அவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட மறுக்கிறார்கள். தங்களின் விடுதலைக்கான நாளை யாரேனும் ஓர் உயர் அதிகாரி மூலம் உறுதிபட அறியாமல் ஒருபோதும் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்கிற பிடிவாதத்தோடு கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ஏனைய 16 பேரும் மருத்துவமனையில் தங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடுமையான போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்த நிலையில், சென்னையிலிருந்து அகதிகள் மறுவாழ்வுத் துறை ஆணையர் அவர்கள் நேரடியாக திருச்சிக்கு சென்று, விரைவில் அவர்களுக்கான விடுதலை கிடைக்கும் என உறுதி கூறி வந்த நிலையில், மீண்டும் கால தாமதப்படுத்துவதால்தான் அவர்கள் இந்த தற்கொலை முயற்சியினை மேற்கொண்டார்கள் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். ஒரு போதும் தற்கொலையை ஆதரிக்க முடியாது; ஊக்குவிக்கவும் முடியாது. அதே நேரத்தில் எத்தனையோ முறை அவர்கள் ஏமாற்றப்பட்ட நிலையில், மன உளைச்சலில், வேதனையின் விளிம்பில்தான் இந்த முடிவை மேற்கொண்டார்கள் என்பதைக் கருணையோடும் கவனத்தோடும் தாங்கள் கணக்கிலெடுத்து, தாயன்போடு அவர்களின் விடுதலையை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக தங்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
20.08.2011

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here