இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் அவர் வீட்டிலிருந்து இராணுவ வாகனத்தில் இராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் ராமேஸ்வரம் பேய்க்கரும்பு என்னும் இடத்தில் முழு இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முப்படை வீரர்களும் அணிவகுத்துச் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். இன்றைய இறுதி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான திருமாளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் கலாமுடம் பணிபுரிந்த நண்பர்கள், குடும்பத்தினர், கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, சுந்தர்ராஜன், உதயகுமார், உள்ளிட்ட அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர். இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட பிறகு முப்படை வீரர்கள் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் மதியம் 12 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ஊர்வலம் வந்த பாதை முழுவதும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையாக காத்திருந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.