காபுல் விமானநிலையத்தில் பெரும் குழப்பம் காணப்படுவதாகவும் ஆயிரக்கணக்கில் மக்கள் விமானங்களில் ஏறி தப்ப முயல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமீட் ஹர்சாய் விமானநிலையத்தில் காணப்படும் குழப்பநிலையினால் பல சர்வதேச விமானசேவைகள் தங்கள் சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
ஐந்து உடல்கள் வாகனமொன்றில் எடுத்துச்செல்லப்படுவதை தான் பார்த்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் நெரிசல் காரணமாக உயிரிழந்தார்களா அல்லது துப்பாக்கி சூடு இடம்பெற்றதா என்பது தெரியவில்லை என மற்றுமொரு நபர் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகள் குறித்து அதிகாரிகள் எதனையும் தெரிவிக்கவில்லை.
எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவில்லை. யார் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர் என்பதும் தெரியவில்லை,பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக விமானநிலைய ஊழியர்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது தலிபான் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம் என அல்ஜசீராவின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த பதற்றநிலையில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். விமானநிலையத்திற்கு வெளியே அனைத்தும் அமைதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை விமானநிலையத்தில் கடும் குழப்பம் நிலவியதாக அல்ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கானவர்கள் விமானநிலையத்திற்குள் நுழைந்து விமானங்களில் ஏற முயன்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.