செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை குழப்புவதற்கு இராணுவம், காவல்துறையினர் மேற்கொண்ட இடையூறுகளுக்கு மத்தியில் வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சியின் வல்வெட்டித்துறையில் உள்ள அலுவலகத்திற்கு முன்பாக கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது செஞ்சோலை படுகொலையின் 15 ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் பதாகை முன்பாக சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு தொடர்பான தகவல் கிடைத்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் நினைவேந்தலை செய்ய விடாது இடையூறு செய்யப்பட்டதையும் மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் முதலுதவி மருத்துவ பயிற்சிக்காக பாடசாலை மாணவிகள் தங்கியிருந்த போது கடந்த 2 ஆயிரத்து 6 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 14 ஆம் திகதி அன்று இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 54 மாணவிகள் உள்ளிட்ட 60 இற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.