பாடித் திரிந்த எங்கள் பாசங்கள்
ஓடிச்சென்று பங்கருக்குள் புகுமுன்
தேடி வந்த கிபீர் குண்டுகள்
துடிக்க வைத்து துளைத்துச் சென்றதே
வெடித்துச் சிதறிய குண்டால்
அடிவயிறும் கிழிந்து பதறிப் பதறியே
பயத்தோடே மரணத்தை அடைந்தனரே
எம் தேசத்தின் நேசங்கள்
சேர்த்து வைத்த ஆசையெல்லாம்
கனவாகிப் போக
ஓசை இன்றி உடல் மட்டும்
உயிரற்று வெறுமையானதே
கண்டவை கனவாகி போகாதா
கேட்டவை பொய்யாகிப் போகாதா
ஏங்கி ஏங்கியே நெஞ்சம் நோகுதே
தாங்கித் தாங்கியே வலியும் கூடுதே
ஈழத்தின் நாளைய கற்றூண்கள்
ஈனரின் கோரத் தாண்டவத்தில்
ஒளி இழந்த வெண் புறாக்கள்
வலி சுமந்த தேசக் குழந்தைகள்
பூக்கும் முன்னே பறிக்கப்பட்ட
மொட்டுக்கள்
எம் தேசத்தின் அழகு மாணிக்கங்கள்
நாளைய ஈழத்தின் நவரத்தினங்கள்
இனவெறிக்கு இரையான இளம் குருத்துக்கள்
கருகிய எம் செந்தளிர்கள்
உருகிய தமிழ் குலக் கொழுந்துகள்
கரம் கூப்பி தொழுகின்றோம்
கண்மணிகளே எம் தேசத் குயில்களே….
அருந்தமிழ்.
14/08/2021