வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ஆரம்பமாகியது. பொது மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு அனுமதிக்கப்படாமையால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என யாழ்.மாநகரசபை முதல்வர் அறிவித்தும் ஆலயத்திற்கு வருபவர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
திருவிழா உபயகாரர்களுக்கு மட்டுமே பாஸ் அனுமதி வழங்கப்பட்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டது அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
நல்லூரான் கொடியேற்ற நிகழ்வை நேரில் கண்டு, நல்லூரானை வணங்கி செல்ல வந்த பக்தர்களை ஆலய சூழலுக்குள் அனுமதிக்க பொலிஸார் மறுத்தமையால் , வீதியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
கொடியேற்ற நிகழ்வு முடிவடைந்ததும் , நல்லூரானுக்கு உடைக்க கொண்டு வந்திருந்த சிதறு தேங்காயை வீதியில் உடைத்து , வீதியில் கற்பூரம் கொளுத்தி , நல்லூரானுக்கு தூவ கொண்டு வந்திருந்த மலர்களை வீதியில் தூவி , வீதியிலையே விழுந்து வணங்கி சென்றனர்.