யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி மீது நேற்றிரவு (12) வியாழக்கிழமை 06.40 மணிக்கு இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடி கண்ணாடிகள் வாளால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
வழமை போன்று கும்பல் தப்பிச் சென்ற பின்னர் சம்பவ இடத்திற்கு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் விரைந்து வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதாக அறிய முடிகிறது.
வடக்கில் சிறிய காரணங்களுக்கெல்லாம் வாள் வெட்டுக் கும்பல் ஏன் எதற்கென்று கேட்காமல் தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.
பல குழுக்கள் கூலிக்கு மாரடிக்கும் கும்பல்களாக சினிமா பாணியில் இயங்கி வருகின்றன. கோவிட் தாக்கம், பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் குறித்த குழுக்களின் அடாவடிகளும் அப்பாவிப் பொதுமக்களை கடும் விசனத்திற்கு உள்ளாக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் மத்தியில் உருவெடுத்துவரும் குறித்த கும்பல்களை சிறிலங்கா அரசாங்கம் ஊக்குவித்து வருகின்றதான அச்சமும் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.