நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த பெருந்திருவிழா நாளை 13.08.2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது.
கொடியேற்ற நிகழ்வுக்காக கொடிச்சேலை கையளிக்கும் நிகழ்வை முன்னிட்டு சட்டநாதர் கோவிலை அண்மித்துள்ள வேல் மடம் முருகன் கோவிலில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, அங்கிருந்து சிறு தேரில் கொடிச்சேலை நல்லூர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான சுகாதார வழிகாட்டலின் படி 100 பேருடன் ஆலய உட்பிரகாரத்தில் மாத்திரம் திருவிழா நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த வருட ஆலய உற்சவத்தினை திறம்பட செயற்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.