இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை நண்பகல் 11 மணியளவில் முழு ராணுவ மரியாதையுடன் ராமேஸ்வரத்தில் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திரமோடி உட்பட அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். மேகாலயா மாநிலம் ஷில்லாங் சென்றிருந்த அப்துல் கலாம், மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நேற்று மாலை மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவரது உடல் தலைவர்களின் அஞ்சலிக்காக தற்போது டில்லியில் உள்ள அவரது இல்லமான ராஜாஜி மார்கில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி உட்பட பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தில்லியில் இறுதிச் சடங்குகள் நடத்தலாம் என்று ஆலோசித்த போது, கலாமின் குடும்பத்தார், அவரது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த மண்ணில்தான் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து, மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியது. நாளை காலை டில்லியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டுவரப்படும் அப்துல் கலாமின் உடல் வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் முழு ராணுவ மரியாதையுடன் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தை, மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்து வருகிறார்.