தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் பிறந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்து நின்ற ‘பாரத ரத்னா’ அப்துல் கலாம் அவர்களது திடீர் மரணம் எம்மை பெருந்துயரத்திற்குள்ளாகியுள்ளது.
ஏழ்மையின் பிடியில் சிக்கித்தவித்த போதிலும் இடைவிடாத முயற்சி, கடின உழைப்பின் மூலமாக அறிவாற்றலில் சிறந்து விழங்கியதுடன் உலகமே போற்றும் உன்னத நிலையினையும் அடைந்திருந்தார்.
இந்திய விண்வெளித்துறை, அணுசக்தித்துறை ஆகியவற்றின் வரலாற்றில் பொற்காலத்தை ஏற்படுத்தியிருந்த அப்துல் கலாம் அவர்கள், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பதவிவகித்ததன் மூலம் அந்தப் பதவிநிலைக்கே பெருமை சேர்ந்து கொண்டது.
பதவிநிலைகளில் எட்டமுடியாத உயரத்தை அடைந்தபோதிலும் எளிமையாகவும் மக்கள் எளிதில் அணுகக்கூடியவராகவும் இருந்து புது இலக்கணம் படைத்திருந்தார்.
2020-ம் ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக்கும் எண்ணத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களை ‘கனவு காணுங்கள்’ என்ற தாரக மந்திரத்தின் பின்னால் அணிவகுக்க வைத்திருந்தார்.
இந்திய இளைஞர்களின் உந்துசக்தியாக செயல்பட்டுவந்ததன் மூலம் இந்தியப் பெருந் தேசத்தின் உயிர்த்துடிப்பாக இயங்கிக் கொண்டிருந்த அப்துல் கலாம் அவர்கள் அந்த இளைஞர்களுக்கு மத்தியிலேயே தனது பயணத்தை முடித்துள்ளார்.
இந்திய நாட்டின் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரின் வழிகாட்டியாகத் திகழ்ந்த ‘பாரத ரத்னா’ அப்துல் கலாம் அவர்களின் இழப்பானது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரின் மறைவிற்கு உலகத் தமிழர்கள் சார்பில் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தாய்த்தமிழக மக்கள் உள்ளிட்ட இந்திய மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை
Home
சிறப்பு செய்திகள் இந்தியப் பெருந் தேசத்தின் உயிர்த்துடிப்பாக இயங்கியவர் அப்துல் கலாம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!