மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்கு ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நீதிபதிக்கு முன்னால், முன்னாள் ஜனாதிபதிக்கு முன்னால் நாட்டு மக்களின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்ட விதத்தை நீதிமன்றத்தில் வெளியிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பேருவளையில் நடைபெற்ற ஜே.வி.பியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜே.வி.பியின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்க முடியும். இரண்டு முழுமையான வருடங்கள் இருக்கும் நிலையில் சாத்திரக்காரரின் பேச்சைக் கேட்டு தேர்தலை நடத்தி யுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அநுரகுமார திசாநாயக்க, எனக்கும் மேலும் சிலருக்கும் எதிராக வழக்குத் தொடரப் போவதாக மஹிந்தவின் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். இதன்போது நாட்டு மக்களின் சொத்து கொள்ளையிட்ட விதத்தை நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்த முடியும்.
அதேநேரம், மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றம் வருவதை நாம் வரவேற்கின்றோம். காரணம் என்னவெனில் இதுவரை அவருடைய மகனை அல்லது அவருடைய சகோதரர்களைப் பார்த்தே அவர் தொடர்பான கேள்விகளைக் கேட்கவேண்டியிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்தால் அவரிடம் நேருக்கு நேர் கேட்கவேண்டிய கேள்விகள் பல உள்ளன.
ஏன் அவர் மீண்டும் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றார். நாட்டில் மேற்கொண்ட மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகள் இறுதிக்குச் செல்லும்போது அவர் கைதுசெய்யப்படும் நிலைமையே ஏற்படும். இதனைத் தடுக்க முடியாது. இவ்வாறான விசாரணைகளை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே அவர் மீண்டும் அரசியலுக்கு வரப்பார்க்கின்றார்.
களவெடுத்தாலும் பரவாயில்லை. கள்வர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கக் கூடாது என நினைப்பவர்களே வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பார்கள். அது மாத்திரமன்றி பரம்பரையாக இரண்டு பிரதான கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றோம் என்ற நிலைப்பாட்டை மாற்றி நாட்டை முன்கொண்டு செல்லக் கூடிய ஜே.வி.பி போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.
இரண்டு பிரதான கட்சிகளும் மாறி மாறி நாட்டை ஆட்சிசெய்துள்ளன. இவற்றால் நட்டை முன்கொண்டு செல்ல முடியாது என்பது வரலாற்று ரீதியாக நாம் அறிந்துகொண்டுள்ளோம் என்றார்.