போதைப்பொருள் பாவனையினால் சீரழிந்து செல்லும் இளைய சமுதாயத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு போதைகலந்த பாக்கு , கஞ்சா கலந்த பாக்கு மற்றும் மாவோ என்பனவற்றை யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் இன்று மதியம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாக்கு உள்ளிட்டவையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் போதைப்பொருள் தொடர்பில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
அந்தவகையில் தற்போது பாடசாலைகளுக்கு அருகில் ஐஸ்கிறீம் விற்பனை, பொட்டிக் கடைகள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகள் என்பன அகற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் பொலிஸ் விசேட ரோந்துகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது போதைப்பொருளை ஒழிப்பதற்கு யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி நானும் என்னுடன் இணைந்த பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இவ்வாறான எமது செயற்பாட்டினால் பொதுமக்கள் எங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். இன்று மதியம் யாழ்ப்பாணம் சிவில் குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐந்து சந்திப்பகுதியில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை கலந்த பாக்கு விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து போதை கலக்காத பாக்கு 43 கிலோக்கிராம், போதை கலந்த பாக்கு ஒரு தொகுதி , மாவோ போத்தல்கள் 70 என்பன மீட்கப்பட்டன. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களைப் பாதுகாப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் என்னுடன் இணைந்து பொலிஸ் பரிசோதகர் சுனில் வீரக்கோன், சாயன்களான ரவீக், உடகெதற, கிரிநாத், கனங்கொள்ள, ஜெயந்தன், ரம்யானி ஆகியோர் இன்றைய அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டோம்.
புதிய வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களில் பெருந்தொகையான போதைப்பொருட்களை கைப்பற்றினோம். கைது செய்யப்பட்டவர் விச போதைவஸ்து பாவனை தடுப்பு சட்டத்தின் கீழ் நாளை யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.