முல்லைத்தீவு – வட்டுவாகல் கோத்தபாய கடற்படைமுகாமுக்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் நோக்கோடு நில அளவை செய்யும் செயற்பாடு நாளை (29) இடம்பெறும் என நில அளவை திணைக்களத்தால் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக மக்களால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும் கூடும் என்ற அடிப்படியில் கோத்தபாய கடற்படை முகாம் கடற்படையினரால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கோத்தபாய கடற்படைமுகாமில் 617 ஏக்கர் நிலம் உள்ளடங்குகின்றது. இதில் பெரும்பாலான பகுதி பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களாகும் ஏற்கனவே கடந்த சில வருடங்களாக நில அளவை செய்து காணியை நிரந்தரமாக சுவீகரிக்க முற்பட்ட நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் அளவீட்டு பணிகள் கைவிட பட்டிருந்த நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அளவீடு செய்து சுவீகரிக்கும் பணிகள் நாளை (29) இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் இந்த அளவீட்டு பணிகளுக்கு பொதுமக்களும், மக்கள் பிரதிதிகளும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டங்களை மேற்கொள்வார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படியில் கோத்தபாய கடற்படை முகாம் கடற்படையினரால் பாதுகாப்பு கெடுபிடிகள் என்றுமில்லாதவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வட்டுவாகலிலிருந்து முல்லைத்தீவு நகரம் வரை இரண்டு பவள் கவச வாகனங்களில் ஆயுதம் தரித்த கடற்படையினர் நாள் முழுவதும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு கடற்படை முகாம் முன்பாக வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு விசேட உடைதரித்த ஆயுதம் தங்கிய கடற்படையினர் காவலில் ஈடுபட்டுள்ளதோடு வீதியால் செல்பவர்களின் விபரங்களை பதியும் செயற்பாட்டினையும் முன்னெடுத்துள்ளார்கள்.
நாளை மக்கள் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பை காட்டுவதை தடுக்கும் விதமாக பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கோடு இந்த திடீர் பாதுகாப்பு கெடுபிடிகள் ஏற்படுத்தபட்டுள்ளதாகவும் கடற்படையின் திடீர் பாதுகாப்பு கெடுபிடிகளால் முல்லைத்தீவு நகரை அண்டிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.