ஒரு சட்டத்தில் விசாரணையும் இன்னொரு சட்டத்தில் தண்டனையும் கொடுத்து சட்டவாளர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்திய யூலைமாதத்திலும், தொடரும் சட்டத்திற்கு முரணனான சனாதிபதியின் செயற்பாடுகளுக்கும் மத்தியில் உயிரிழந்து போன 15வயதுச் சிறுமி கிசானிக்கு நீதிதான் கிடைக்குமா?
கடந்த 15 ஆம் நாள் முன்னாள் அமைச்சர் பதியுதீன் வீட்டிலே பணியாற்றி தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த சிறுமி கிசாலினியின் இழப்பானது மிகுந்த வேதனையையும், அதே நேரத்தில் சிங்கள தேசத்திலும் நம்பிக்கையற்ற கடுங்கோபத்தையும் உலகத்தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.
கடந்த பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயர்களால் இலங்கைத்தீவிற்கு கொத்தடிமைகளாகவும், ஆசைவார்த்தைகளுக்கும் தமிழ்ப்பேசும் மக்களை அடிமைப்படுத்தி மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் அடக்கியும், ஒடுக்கியும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து உரிமைகளையும், இன்றுவரை மறுத்தும் வரும் வேளையில், உயிரையே கொண்டு செல்லும் அட்டைக்கடிகளுக்கு மத்தியிலும் தமது உதிரத்தைக் கொடுத்து சிங்கள சிறீலங்கா தேசத்தை வளமாக்குவதட்கு உழைப்பவர்களை உழைக்கின்ற தேயிலை தோட்டத்து மக்கள், தமது வறுமையின் காரணமாகவும், குடும்பத்தின் சூழ்நிலைகாரணமாகவும், கல்வியைத் தொடரமுடியாத நிலையில் மானத்தை மூலதனமாகக் கொண்டு கூலிவேலைகளையே செய்து வரும் இம் மக்களை ஒரு பொருட்டாக மதிக்காது அவர்கள் செய்யும் தொழிலுக்கு உரிய ஊதியத்தையும் வழங்காது தொடர்ந்து அடிமைகளாகவே வைத்திருக்கும் பணக்கார மிதவாதிகளின் மற்றொரு பலிக்கு இந்த 21 ம் நூற்றாண்டில் 15 வயதே நிரம்பிய கிசாந்தினி என்னும் பெண் குழந்தை உயிர்ப்பலியெடுக்கப்பட்டிருப்பது மனிதநேயமிக்க எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஈழத்தில் உரிமையோடும், மானத்தோடும் தமிழ் மக்கள் வாழமுடியாத நிலையேற்பட்டபோது உயிர்வாழவேண்டும் என்பதற்காக எமது மண்ணும் மக்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக எமது பொது எதிரியே எங்கள் கையில் ஆயுதத்தை திணித்திருந்தது, போராடும் நிலையை ஏற்படுத்தியது. உயிர் தியாகம் நிறைந்த இப் போராட்டக் காலத்தில் எமது மண்ணில் மக்கள் குழந்தைகள் நிமிர்வோடுதான் வாழ்ந்தனர். பல நூறு குழந்தைகள் பெற்றவர்களை இழந்து போனாலும் அவர்கள் யாவரையும் எம் தேசம் தங்கள் கைகளில் தாங்கி இவர்கள் எவரும் யாருமற்ற அநாதைகள் அல்ல எம் தேசத்தின் பிள்ளைகள் என்றும் அவர்களுக்கான கல்வி, தொழில் போன்ற அனைத்தையும் செய்து கொடுத்திருந்தார்கள். ஆனால் இதனை சிங்களதேசம் சிறுவர் போராளிகள் அவர்களுக்கான பயிற்ச்சி என்று பல்வேறு பரப்புரைகளை பரப்பி அவர்கள் வாழ்ந்த படித்த பாடசாலைகள் மீது குண்டுகள் வீசு ஒரு தலைமுறையை அழித்திருந்தது. ஆனால் இதையெல்லாம் செய்து முடித்த சிங்கள அரசும், அதற்கு உடன்போயிருந்த சர்வதேச நாடுகளும் இந்த கிசாலிளி என்ற சிறுமிக்கு நடந்த கொடூரத்தினைப்போல் இன்னும் பல குழந்தைகள், பெண்கள் அடிமைகளாகவும், அநியாயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் அறியாது தான் இருக்கின்றதா? அல்லது அறியாதமாதிரி இருக்கின்றதா?
ஈழத்தமிழர் வேறு, மலையகத்தமிழர் வேறு தமிழ்நாட்டுத் தமிழர் வேறு, உலகத்தமிழர் வேறு அல்ல. எல்லோருமே தமிழால் இனத்தால் உணர்வால் நாம் அனைவரும் ஒன்றே! உலகத்தில் எங்கு ஒரு தமிழன் உயர்வாக இருந்தாலும் அது எமக்குப் பெருமையே, எங்கு துயரத்தை அடைந்தாலும் அது எமக்குத் துயரமே!
இன்று நாடுமுழுவதும் சிறுமியின் படுகொலைக்கு நீதிகோரியும், கண்டனத்தைத்தை தெரிவித்தும் நடைபெறும் போராட்டங்களில் எமது பங்கையும், ஆதரவையும் பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் தெரிவித்து நிற்கின்றோம்.
இவ் மனிதநேயமற்ற அநியாயத்தை உரிய இடங்களுக்கு எடுத்துச்சொல்வோம். இற்றைக்கு 38 வருடங்களுக்கு முன் வெலிக்கடையில் யூலை மாதம் நடைபெற்ற அரசியல் கைதிகளின் நீதி விசாரணை சர்வதேச சட்ட விதிமுறைகளை கடைபிடித்து நடாத்திவிட்டு கைதிகளின் உயிரை பறிக்க வேண்டும் என்ற நோக்கில் இன்னொரு சட்டத்தில் மரணதண்டனை விதித்தது சிங்கள தேசம்.
இன்று ஒரு சட்டத்தில் மரணதண்டனை குற்றவாளி சட்டவிதிகளுக்கு அப்பால் சென்று சிங்களவர் என்ற காரணத்தால் சனாபதியின் பெயரால் விடுதலை செய்யப்பட்டிருப்பது இன்றைய காலம். சிங்கள் தேசத்தின் சட்டத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்ற இக்காலத்தில் எமக்கானதும் எமது இனத்துக்கான நீதியைக் கோரி சர்வதேசம் நோக்கி கொண்டுசெல்ல வேண்டியதும் எமது தலையாய கடமையே!
தம் பிள்ளையின் உயிரை இழந்து நீதிகேட்டு தவித்து நிற்கும் குடும்பத்துடன், மக்களுடன் பிரான்சு வாழ் தமிழீழ மக்களும் உலகத் தமிழ்மக்களும் துயரினை பகிர்ந்து கொள்கின்றோம்.
தமிழீழ மக்கள் – பேரவை பிரான்சு.