பிரான்சில் கடந்த 17.07.2021 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021 தொடர்பில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவம் வருமாறு:-
தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021, 17-07-2021 அன்று சிறப்பாக நடந்தேறியது. எமது வாழ்க்கை முறையையே மாற்றியமைத்துவிட்ட கோவிட்-19 இன் தாக்கத்திற்கிடையேயும், பிரான்சின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 64 தமிழ்ச்சோலைகள், தனியார் பள்ளிகளில் தமிழ் பயில்வோர்களுடன் தனித்தேர்வர்களுமாக 4916 மாணவர்கள் வளர்தமிழ் 01 முதல் 12 வரையான வகுப்புகளில் இத்தேர்வில் தோற்றியிருந்தனர்.
இத்தேர்வுப் பணிகளில் ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் பங்கெடுத்து ஒத்துழைத்த அனைத்துத் தமிழ்ச்சோலைகளினதும் தனியார் பள்ளிகளினதும் நிர்வாகிகள், தமிழ்ச்சங்கத் தலைவர்கள், தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், தமிழ்ச்சோலைச் செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழார்வலர்கள் அனைவருக்கும் எமது மனதார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்தேர்வினைக் குறுகிய கால இடைவெளியினுள் சிறப்புற நடாத்தி முடிப்பதற்கு, தேர்வுப்பணிகளின் ஒவ்வொரு கட்டத்திலும் எம்முடன் இணைந்து பணியாற்றிய தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்களின் ஒத்துழைப்பு எமக்கு பெருந்துணையாகவிருந்தது. தமது கல்விச் செயற்பாடுகளுக்கும் பணிச்சுமைகளுக்கும் இடையிலும் பிரதிபலன் கருதாது செயலாற்றிய இவர்களுக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் உளப்பூர்வமான நன்றி.
இத்தேர்வின் வெற்றிக்கு பக்கபலமாக எமக்குத் தோள்கொடுத்த தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பினதும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினதும் கரங்களை நாம் நன்றியுடனும் மகிழ்வுடனும் பற்றிக்கொள்கிறோம்.
நெருக்கடிகளால் மனந்தளராது தொடர்ந்து தமிழ்மொழியைப் பயின்று இந்தத் தேர்விற்குத் தோற்றிய மாணவர்களுக்கும் அவர்களை நெறிப்படுத்திய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்ளுக்கும் எமது பாராட்டுக்கள். அனைவரதும் ஒருமித்த ஒத்துழைப்பால் இத்தேர்வு சிறப்பாக நடந்தேறியுள்ளது. இது எமக்கு மேலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும், வருங்காலத்தில் எமது பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் என்ற உந்துதலையும் தருகின்றது. தொடர்ந்தும் தமிழால் இணைந்திருந்து உலகெலாம் தமிழ் வளர்ப்போம்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.ASSOCIATION TAMOULCHOLAI
165 Bd de la Villette75010 ParisFRANCE
இணையம்: http://tamoulcholai.frதொலைபேசி எண்: 09 84 06 38 83புதன் – ஞாயிறு : 14.30 -19.30
‘’நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்’’