கறுப்பு யூலை 38 ஆவது ஆண்டில்
ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் மே மாதம் எவ்வாறு மறக்க முடியாததொரு மாதமோ அதே போலவே யூலை மாதமும் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத மாதம்.
வெலிக்கடைச்சிறையில் சிறைவைக்கப்பட அரசியல் கைதிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றவர்களுடன் 52 ற்கும் மேற்பட்டோர் அநியாயமாக உயிர்கள் திட்டமிட்டு பறிக்கப்பட்டதும்.
கலவரம் என்ற பெயரில் தொடர்ந்த திட்டமிட்ட தமிழினஅழிப்பும், உயிர் பறிப்பும் இந்நாட்களில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகியதும், கோடிக்கணக்கான சொத்துக்கள், உடமைகள், பறிக்கப்பட்டது. சிங்கள இனத்துடன் சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்த வாழ்க்கை நம்பிக்கை யெல்லாம் உடைந்து சிதைந்து ஈழத்தமிழ் மக்கள் சொந்த நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து அயல்நாடான இந்தியா ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு செல்லவேண்டிய தொரு நிலையை ஏற்படுத்தியதும்.
அதே நேரத்தில் இந்த யூலை மாத தமிழின அழிப்பே தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு மீண்டும் மறுபிறப்பு எடுக்க வைத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் கலைத்து கொண்டு ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்து நிமிர்ந்து நின்றான். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு நீண்ட நெடுங்காலமாகத் தூங்கிக்கொண்டிருந்த தமிழ் தேசம் விழித்துக்கொண்டது. எழுத்தாணியும், அகப்பையும் ஏந்திய இளைஞர், யுவதிகள் தம் இனம் உயிர்வாழ்வதற்கு வேறு வழியோ தெரிவோ இன்றி போராடப்புறப்பட வைத்ததொரு மாதம்.
இதனால் புலம் பெயர்ந்த எம்மக்கள் 38 ஆண்டுகளில் பல்வேறு சோனைகளையும், வேதனைகளையும் தாங்கி தமது கடுமையான உழைப்பால் உயர்ந்ததும், இன்று நிம்மதியான வசதி நிறைந்த வாழ்வை அனுபவித்தாலும் இந்த 1983 யூலை கலவரத்தை யாரும் மறுக்க மாட்டாளர்கள். புலம்பெயர் நாடுகளில் தமிழீழ தேசமக்களை மனிதாபிமானத்தோடு அரவணைத்து அரசியல் அடைக்கலம் தந்ததை யாரும் மறந்து விடமுடியாது.
இந்த வரலாற்றை எம் வளரும் சந்ததி அறிய வேண்டும் என்றால் நாம் அடைந்த துன்பத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். செல்ல வேண்டும். தமிழர்கள் வாழும் நாடுகளில் இடம் பெறும் கறுப்பு யூலை 23 கவனயீர்ப்புப் போராட்டத்தில் எமது மக்கள் பங்குகொள்ள வேண்டும்
பிரான்சில் எதிர்வரும் 23 ம் நாள் வெள்ளிக்கிழமை பாரிசு பஸ்தில் சிறையுடைப்பு ( சுதந்திர சின்னத்திற்கு) முன்பாக பி. பகல் 3.00 மணிக்கு நடைபெறும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தமிழீழ மக்கள் பேரவை – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு