இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் பெரிதும் மோசமடைந்துள்ளன என்று சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன், போரின் பின்னரான காலத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளிலும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதுமாத்திரமன்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதாக அளித்த வாக்குறுதியையும் மீறி, 2020 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அச்சட்டத்தைப் பயன்படுத்தி வந்திருப்பதாகவும் பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவக்கூடிய செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் சிவில் சமூகக் குழுக்களின் வகிபாகங்களை வலுப்படுத்துவதற்கும் போரின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும் பிரிட்டன் உறுதியளித்துள்ளது.
பிரிட்டனின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தினால் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் நிலவரம் தொடர்பில் வருடாந்தம் அறிக்கை வெளியிடப்படும். இந்தவகையில் குறித்த அலுவலகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
இலங்கையின் மனித உரிமை நிலவரங்களைப் பொறுத்தவரையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அது ஒட்டுமொத்தமாக மிகவும் மோசமடைந்திருந்தது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் சுதந்திரமானதும் அமைதியானதுமான முறையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியதுடன், சர்வதேச நாடுகளில் பதிவான கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவானதாகவே காணப்பட்டது.
எது எவ்வாறெனினும் சிவில் சமூக அமைப்புக்களின் மீதான தொடர்ச்சியான கண்காணிப்பும் அடக்குமுறையும் காணப்பட்டது.
இதுமாத்திரமன்றி சில சமூகத்தினர் அவர்களது மதநம்பிக்கையின்படி உயிரிழந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கான உரிமைக்குத் தடைவிதிக்கப்பட்டதுடன் குற்றச்சாட்டுக்களின்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்தன.
மேலும் போரின் பின்னரான காலத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளிலும் பின்னடைவு ஏற்பட்டது.
அடுத்ததாக கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது போரின் பின்னரான நிலைமாறுகால நீதிப்பொறிமுறை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிவற்றை உறுதிசெய்வது தொடர்பில் ஏற்கனவே இலங்கையினால் இணையனுசரனை வழங்கப்பட்டிருந்த 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டது.
இதுமாத்திரமன்றி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கு உள்ளகப்பொறிமுறையைக் கையாள்வதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த போதிலும், தற்போதுவரை அதில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லை.
எனினும் 2020 பெப்ரவரி, ஜுன் மற்றும் செப்ரெம்பர் ஆகிய மாதங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்த நாடுகளின் சார்பில் எம்மால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எமது நிலைப்பாட்டைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.
மேலும் கடந்த 2000 ஆம் ஆண்டில் மிருசுவில் என்ற இடத்தில் ஒரு சிறுவர் உள்ளடங்கலாக 8 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2015 ஆம் ஆண்டில் மரணதண்டனை வழங்கப்பட்ட முன்னாள் இராணுவ உறுப்பினர் சுனில் ரத்நாயக்க கடந்த 2020 மார்ச் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டமையானது, இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை மேலும் கேள்விக்கு உட்படுத்தியது.
இதுமாத்திரமன்றி போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்த சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரிகள் அரச நிர்வாகக் கட்டமைப்பின் முக்கிய பதவிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டதுடன் சிவில் நடவடிக்கைளை முன்னெடுக்கும் அரச சார்பற்ற கட்டமைப்புக்களின் செயலகங்கள் பலவும் பாதுகாப்பு அமைச்சின்கீழ்க் கொண்டுவரப்பட்டன.
இத்தோடு நீதிமன்றம் உள்ளிட்ட சுயாதீனக்கட்டமைப்புக்கள் பலவற்றுக்குமான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின்கீழக் கொண்டுவரும் வகையிலான திருத்தங்களுடன் அரசாங்கத்தினால் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது சில முக்கிய கட்டமைப்புக்களின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்தது.
இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவக்கூடிய செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் சிவில் சமூகக்குழுக்களின் வகிபாகங்களை வலுப்படுத்துவதற்கும் போரின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கும் பிரிட்டன் தயாரக இருக்கின்றது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.