22.07.2015
கறுப்பு யூலை – 32 ஆண்டுகளுக்கு முன் சிங்கள தேசத்தினால் நடாத்தி முடிக்கப்பட்ட பாரிய இனவழிப்பு ஒன்றை பதிவுசெய்து வரலாறு பூராகவும் அதனை காவிச் செல்லும் நிகழ்வாக அமைந்து விட்டது. இக்கோரத் தாக்குதல் தமிழர்கள் சிங்களத்தை எதிர்த்துப் போராடும் மன எழுச்சியினை தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்தன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
1983 -ல் சிங்கள அரசும் அதன் இனவாத இயந்திரங்களும் இணைந்து நடாத்திய கோர வெறியாட்டம் இலங்கைத்தீவில் இருவேறு தேசியங்கள் முரண்பாடுகளுடன் வாழுகின்றன என்பதை உலகத்திற்கு எடுத்துச் சொல்லியது. அன்று முதல் ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழு உட்பட பல்வேறு சர்வதேச மன்றங்களுக்கும் தமிழர் வேண்டுதல் எட்டியது. அவர்களும் இலங்கைத் தீவின்மேல் தமது பார்வையை செலுத்தினார்கள்.
இவ்வின முரண்பாடுகளிடையே தமிழ்த் தேசியம் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு போராடி தமிழர் பாதுகாப்பிற்கும், சுபீட்சமான வாழ்வுக்குமாய் தமிழீழ தேசத்தை அமைத்து தனித்துவமான சட்ட அமைப்புகள் பொருளாதார – சமூக கோட்பாடுகளை பிரதிபலிக்கும் செழுமையான கட்டமைப்புகளை உருவாக்கி நிழல் அரசால் பரிபாலித்து வந்தது. இந்த நிலைக்காய் எத்தனையோ இழப்புகளையும், இறப்புகளையும், துயரங்களையும் தமிழ் மக்கள் தாங்கிக் கொண்டார்கள்.
ஆனால், சிங்கள அரசானது இலங்கை நாட்டை ஒரு நாடு(சிறிலங்கா), ஓர் இனம் (சிங்களம்), ஒரு மதம் (பௌத்தம்) என்னும் கோட்பாட்டில் இருந்து இம்மியளவும் விலகாது கபடத்தனமாக உலகத்தை துணைக்கழைத்து, உலக சட்டத்திற்கு மாறான ஆயுதங்களை உபயோகித்து, 2009 -இல் முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பை நடாத்தி நிற்கிறது. இன்று வரை வாழ்விடங்கள் நில அபகரிப்பு, தமிழர் அடையாளங்கள், பண்பாட்டு மொழி என்பன தொடரும் ஓர் இன அழிப்புச் செயற்பாடாகவே நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இது 2015 சனவரி 8ஆம் திகதியின் பின்பு ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சியிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இது எதனைக் காட்டி நிற்கிறது என்றால் சிறிலங்கா தனது நிலையில் மாற்றம் கொண்டு வரப்போவதில்லை என்பது தெளிவு. இந்நிலையில் சிறிலங்கா 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இன்று வரை செய்து வருவது ஒரு திட்டமிட்ட இன அழிப்பே. இதன் உச்ச இனஅழிப்பே முள்ளி வாய்க்காலில் நடைபெற்றதென்பதை சர்வதேசத்திற்குத் தளராது உரத்துச் சொல்லவேண்டிய கடமை எமக்குண்டு.
வரும் செப்டெம்பர் ஐ. நாவில் வர இருக்கும் போர் குற்ற அறிக்கைக்கு வலுச்சேர்ப்போம். வடக்கு மாகாணசபை சிறிலங்காவில் நடைபெற்றது இனவழிப்பே என்பதை பிரேரணையில் ஏகமனதாய் கொண்டு வந்து இன்னும் வலுச் சேர்த்துள்ளது. இன்று வடக்கு மாகாண முதலமைச்சரின் அமெரிக்க, பிரித்தானிய விஜயமானது அந்நாடுகளின் அரசாங்கங்களுக்கும,; மக்களுக்கும் ஓர் உத்தியோகபூர்வமான நிலையுடன்கூடியதான இனவழிப்பு வலியுறுத்தல் அவரது நேரடிக்கூற்றாக அமைந்துள்ளதுடன் இன்றைய வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் நிலையையும் எடுத்துக்காட்டி நிற்கிறது.
இதன் பின்னும் சிங்களத்தின் எண்ணத்தில் மாற்றம் இல்லை. இதற்கான பொறுப்பை உலக அரங்கில் சிங்கள அரசு கூறவேண்டிய நிலையும் உருவாகி உள்ளது.
இதில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் தங்கள் மனக்குமுறலையும், இழப்பிற்கான நீதியையும் கோரி வெகுசனப் போராட்டங்க@டாக உலகிற்கு நினைவுபடுத்துவதன் மூலம் எமது விடுதலைக்கு வழிசமைக்க முடியும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு