அத்துருகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் விமானப்படைக்கு சொந்தமான ரஷ்ய தயாரிப்பான அன்ரனோவ் -32 ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளதுடன், கிராம வாசி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இந்த விமானம், கட்டுநாயக்கவிலிருந்து இரத்மலானைக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளை இறப்பர் தோட்டத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பனிமூட்டமே இந்த விபத்துக்குக் காரணமாக அமைந்திகருக்கலாமென்று சிவில் விமான போக்குவரத்துச்சபை தெரிவித்துள்ளது. இந்த இறப்பர் தோட்டத்தில் நான்கு வீடுகள் அமைந்துள்ள நிலையில், ஒரு வீட்டின் கூரை சேதமடைந்துள்ளது. இதன்போது, எரிகாயங்களுக்குள்ளான ஒருவரே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏ.என் -32 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் உக்ரைன் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகையைச் சேர்ந்த முதலாவது விமானம் 1976 ஜூலை 9 ஆம் திகதி உற்பத்தி செய்யப்பட்டது
உள்நாட்டுப் போர்களின் போது குண்டு போடுதல் மற்றும் போக்குவரத்து என்பவற்றுக்கு இந்த ரக விமானம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த ரக விமானத்தை கொள்வனவு செய்த நாடுகளாக இந்தியா, அங்கோலா, இலங்கை, உக்ரைன் என்பன காணப்படுகின்றன. இந்த விமானத்தின் பெறுமதி 6 -9 மில்லியன் டொலர்கள் (2000 ஆம் ஆண்டில்) என தெரிவிக்கப்படுகின்றது.
அன்டனோவ்-32 விமானம் (+50 ° சி) சூடான காலநிலை உள்ளிட்ட பல்வேறு காலநிலை நிலைமைகள், இயக்கப்படும் ஒரு விமானம். விமானத் தளத்திலிருந்து 4500 மீற்றர் உயரம் வரை இது பறக்கும் திறன் கொண்டது. அதற்கு மேல் பறக்கும் திறன் கொண்டதல்ல இந்த விமானம்.
இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் விமானப்படைகளுக்கு சேரும் புதிய வீரர்களுக்கு இந்த விமானத்தின் மூலமாக அதிகளவு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
தற்பொழுது 240 அன்டனோவ்-32 விமானங்கள் உலகம் பூராகவும் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை விமானப் படையினர் தங்களுடைய போக்குவரத்தை இலகுவாக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரைவழித் தாக்குதலிருந்து தம்மைப் பாதுகாத்து கொள்ளவும் இதனை அதிகாமாக பயன்படுத்தினர்.
[mom_video type=”youtube” id=”http://youtu.be/mdYv-ermZqY”]