மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புப் பிரிவில் உள்ளவர்கள் எனக் கூறப்படும் இராணுவத்தினர் மூவர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிரிஹான பகுதியில் பயணித்த வான் ஒன்றில் சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 07.30 அளவில் குறித்த வான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வானில் இருந்தவர்கள் சிவில் உடை தரித்த இராணுவத்தினர் எனவும் இவர்கள் வசமிருந்த துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தியபோது அவர்கள் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பிரத்தியேக பாதுகாவலர்களாக செயற்பட்டு வந்ததாக கூறியுள்ளனர்.
எது எவ்வாறு இருப்பினும் சம்பவத்துடன் தொடர்புடைய வான் மற்றும் அதன் இலக்கத் தகடு என்பன இராணுவத்தினருக்கு சொந்தமானதா என்பதை ஆராய்ந்து தெரியப்படுத்துமாறு, இராணுவப் பொலிஸாருக்கு, பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மிரிஹானயில் கைதான இராணுவத்தினர் இராணுவ பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த விசாரணைகளின் போது படை வீரர்கள் குற்றவாளிகள் என தெரியவந்தால் இராணுவ சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு பதவி அந்தஸ்து பாராமல் கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.