தமிழ் இனத்தை அழிப்பதற்கான யுத்தம் ! மாற்றப்படவேண்டிய காலம் இது !!

0
316

Tamil-Daily-News-Paper_54463922978இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின் யூத இனத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டு,எஞ்சிய பகுதியினர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் சின்னாபின்னமாக சிதறுண்டனர்.காலப்போக்கில் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இஸ்ரேல்(ISREAL) என்ற நாட்டைக்கட்டியெழுப்பி உலகத்தையே ஆட்டிப்படைக்கும் ஒரு வலிமைபெற்ற நாடாக இஸ்ரவேலைக் கட்டி எழுப்பிய வரலாறு உலகறிந்த விடயமாகும்.
கடந்த 30 வருடகாலத்துக்கு மேலாக இலங்கைத் தமிழினமும், விடுதலைகோரி போராடி, மதிப்பிடமுடியாத பல்வேறு சாதனைகளைப் புரிந்து சிறிலங்காக்குப் பாரிய தோல்விகளை ஏற்படுத்தியும் இராணுவரீதியில் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியும், சிறிலங்கா இராணுவத்தை திக்குமுக்காட வைத்த நிலை உலகறிந்த விடயமாகும்.
இந்நிலையில் சிறிலங்கா அரசு, இந்தியாவின் முழுமையான ஆதரவுடனும், உலகநாடுகள் சிலவற்றின் கடைக்கண்பார்வையுடனும் தமிழ் மக்களின் விடுதலை இயக்கத்தை அழித்து, 2009ம் ஆண்டில் இரவல் வெற்றியை (தன்னால் முடியாததை) தனதாக்கிக் கொண்டது
இந்த யுத்தத்தின்போது போராளிகள் மட்டுமல்ல ஆண்,பெண்,குழந்தைகள்,இளைஞர்,வயோதிபர் என்ற வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் வகை தொகையின்றி கொன்றொழிக்கப்பட்டனர். இதனால்,தமிழினத்தின் சனத்தொகையில் கணிசமான பகுதி இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பின் ஒரு பகுதி வெற்றிகரமாக நிறைவேறியது.
யுத்தம் முடிந்துவிட்டது. தமிழ் இனத்தை நேரடி யுத்தத்தின் மூலம் இனி அழிப்பதற்கான சந்தரப்பம் எப்போதுமே ஏற்படாது. எனவே தமிழ் இனத்தை மறைவில் இருந்து படிப்படியாக அழிக்கும் யுத்தமொன்றை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டு அதனைப் படிப்படியாக நடாத்திக்கொண்டிருக்கிறது. அதன் ஒவ்வொரு அங்கத்தையும் கீழ் வருமாறு விளங்கிக்கொள்ளலாம்.
யுத்தத்தின் தொடர்ச்சி :
தமிழ் இனம் அழிக்கப்படவேண்டும் அவர்கள் வலிமை உள்ள ஓர் இனமாக, பொருளாதார வலிமையுள்ளவர்களாக,புத்திஜீவிகளாக, உழைத்து உண்டு மகிழ்ந்து சந்தோசமாக ஆரோக்கியமுள்ளவர்களாக வாழக்கூடாது. அவர்களுக்கென்று ஒரு தனியான கலாச்சாரம்,பாரம்பரியம் இருக்கக்கூடாது. தொழில் வாய்ப்பு அற்றவர்களாக,வருமானமற்றவர்களாக,கடனாளிகளாக, ஏழைகளாக, மற்றவர்களிடம் கையேந்துபவர்களாக,ஆரோக்கியமற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அரசின் விருப்பமாகும். அதற்கு ஏற்ப திட்டங்கள் தீட்டப்பட்டு படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவை அனைத்துக்குமான உள்ளடக்கமே இந்தத் தொடர்யுத்தமாகும்.
01.இராணுவமயமாக்கல்;(MILITRAIZATION)
அரசினால் மேற்கொள்ளப்படும் மறைமுக யுத்தத்துக்கு இராணுவ மயமாக்கல் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. சிவில் நிர்வாகம் என்ற போர்வையில் நாட்டின் சகல அலகுகளும், நிர்வாக ரீதியில் இராணுவமயமாக்கப்படுகிறது. மக்களுக்கு பயபீதியை ஏற்படுத்தி, சுயசிந்தனையை மழுங்கடித்து, அவர்களை அடக்கியாள இராணுவமயமாக்கல் தேவைப்படுகிறது. இதன் முதற்கட்டதாக வடமாகாண ஆளுநராக இராணுவ மேஜர் சந்திரசிறி நியமிக்கப்பட்டார். திட்டமிடல் நடவடிக்கை, அபிவிருத்தி நடவடிக்கை, ஏனைய சிவில் நடவடிக்கை அனைத்துக்கும் ஆளுநர் அனுமதி பெறவேண்டும். ஏன் பொது நிகழ்வுகள், வைபவங்கள் என அனைத்துக்கும் இராணுவம் அழைக்கப்பட வேண்டும் . அரசுக்குத் தெரியாமல் எந்த ஒரு சாதாரண நிகழ்வுக்குக்கூட இராணுவத்தின் அனுமதி பெறப்படவேண்டும். அரசு என்ன நினைக்கிறதோ அதுவே நடக்கவேண்டும்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்ஹா – சந்திரிகா குமாரதுங்கவுடன் மங்கள சமரவீர சேர்ந்து சிறிலங்காவில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டு செய்யும் செயற்பாடுகளைப் பார்த்தோம் என்றால் – ஆட்சி மாற்றமும், ஆள் மாற்றமும் மாறி இருக்கின்றதேயன்றி இராணுவ மயமாக்கலில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. வட மாகாண ஆளுநராக இருந்த இராணுவ ஜெனரல் சந்திரசிறியை மாற்றி விட்டு மகிந்த ராஜபக்ச ஆட்சியில் கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லுறவு கமிசனின் உயர் அதிகாரியாக இருந்த பளியகாராவை ஆளுநராக நியமித்தபின் ஏற்பட்ட அசம்பாவிதங்களை பார்த்தால் – தொடர்ச்சியான தமிழ் இன அழிப்புக்கான நிழல் யுத்தம் தொடர்கின்றது என்றே பார்க்கலாம்.
மறுதலிப்புக்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காகவே, அரச அதிபர் பதவிகள்,உதவி அரசாங்க அதிபர் பதவிகள்,பிரதேச செயலர் பதவிகள், ஏனைய நிறைவேற்று மட்ட உத்தியோகத்தர் பதவிகளுக்கு அண்மைக்காலத்தில் பெண் உத்தியோகத்தர் கூடுதலாக நியமிக்கப்பட்டு கடமைபுரிந்து வருகின்றனர். பாரிய எதிர்ப்புக்கள் இல்லாது தமது திட்டங்கள் சுலபமாக நிறைவேறவேண்டும் என்பதுதான் அதற்கான காரணமாகும்.
02.உளவியல் (Psychological)ரீதியல் பாதிப்பை உருவாக்குதல்.
கணவன், அண்ணன், தம்பி குடும்பம் என்று கூட்டுவாழ்க்கை வாழ்ந்த குடும்பத்தினரின் உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டும், காணாமற் போயும், தடுப்பிலும், சிறைகளிலும் இருப்பதனால் அக்குடும்பங்களில் பல தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. அவர்களுக்கு ஆதரவு, உதவி எதுவுமின்றி பயபீதியுடன் வாழவேண்டும் என்பதற்கான கன்னி முயற்சியே அண்மைக்காலங்களில் உருவாக்கப்பட்ட ‘கிறிஸ் பூதம்’ ஆகும். ஆனால் அதன் உண்மை வெளிப்படையாகத் தெரியத் தொடங்கிவிட்டதனால் கிறிஸ் பூதத்தினால் உயிர்வாழமுடியாது போய்விட்டது. உளவியல் ரீதியில் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதுடன், ஆண்களை எவ்வித தொழிலுக்கும் செல்லாது வீட்டில் முடக்க வேண்டும் என்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
03.கலாச்சார சீர்குலைப்பு (CULTURAL DESTRUCTION)
ஓர் இனத்தை அழிக்க வேண்டுமாயின், அந்த இனத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்பவற்றை அழித்துவிட்டால் போதும் அந்த இனம் நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும். இதன் அடிப்படையில் தமிழ் இனத்தின் கலாச்சாரத்தை சீர்குலைக்க அல்லது அழிக்கும் நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அ.மதுபானசாலைகள் திறப்பு:
யுத்த சூழ்நிலைக்கு முன்பிருந்த மதுபானசாலைகளைவிட வடக்கில் புதிதாக 20இற்கு மேற்பட்ட மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு மதுபான விநியோகம்,விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சனத்தொகையில் தமிழ் இளைஞர் தொகையில் கணிசமான வீழ்ச்சி கண்ட நிலையிலும், மதுபான விற்பனை கடந்த காலங்களைவிட இருமடங்காக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகிறது. கடந்தவருடம் (2013இல்) தென்மராட்சி மிருசுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட ஒரு மதுபானசாலை,வடமாகண யாழ்மாவட்ட கட்டளைத் தளபதி கத்துருசிங்க அவர்களால் திறந்துவைக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது. ஒரு இராணுவக் கட்டளைத் தளபதியே ஒரு மதுபானசாலையைத் திறந்து வைப்பதென்றால் அதன் பின்புலத்தை நாம் நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும்.
அளவுக்கு மிஞ்சிய மதுபானபாவனை காரணமாக இளைஞர்கள் போதை தலைக்கேறி, தவறான சமூக விரோத நடவடிக்கைகளுக்குத் துணைபோக வாய்ப்பு ஏற்படுகிறது.
ஆ.போதைப்பொருள் பாவனை:
தெற்கிலிருந்து இரகசியமான முறையில் போதைப்பொருட்கள் கடத்திவரப்பட்டு,அவை தமிழ் இளைஞர் மத்தியில் பாவனைக்கு விடப்படுகின்றது. அதை பாவிக்கும் இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் எமது கலாச்சார சீரழிவுக்கு துணைபோகின்றனர்.
அத்துடன், மதுபாவனை, போதைப்பொருள் பாவனைக்கு நிரந்தர அடிமைகளாகித் தமது வாழ்க்கையையும் தம்மை நம்பியுள்ளவர்களின் வாழ்க்கையையும் அழித்து வருகின்றனர்.
இ. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத அழிப்பும் – மத அழிப்பும், பௌத்தமத உருவாக்கமும்:
கலாச்சார அழப்பின் இன்னொரு பகுதி மத அழிப்பும் பௌத்தமத உருவாக்கமும் ஆகும். யுத்தத்தினால் அழிந்த இந்துக்கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் சீரமைப்பு ஒருபாட்டில் இருக்க, தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் நடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது. வடபகுதியெங்கும் இராணுவம் நிறைந்து காணப்படுவதனால் அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் என்ற அடிப்படையில் சகல இடங்களிலும் அவற்றை அமைப்பதற்கு இராணுவத்துக்கு வசதியாக உள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் அகற்றும்படி யாரும் கேட்கமுடியாது, அப்படிக் கேட்டால் இராணுவம் மட்டுமல்ல சங்கைக்குரிய பௌத்த தேரர்கள் சண்டித்தனம் செய்யுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
4.இயற்கைவளம் அழிப்பு (NATURAL RESOURCES)
தமிழ்மக்களின் வாழ்வாதாரமாகவும், பொருளாதார வலுவூட்டலுக்குக் காரணமாகவும் இருந்து வரும் இப்பிரதேச இயற்கைவளம் சூறையாடப்பட்டும், அல்லது படிப்படியாக அழிக்கப்பட்டும் வருகிறது.
அ.காடுகள் அழிப்பு:
பெறுமதி மிக்க காட்டுமரங்கள் அரசின் ஆதரவுடன் தறிக்கப்பட்டு,தெற்குக்கு கொண்டு செல்லப்படுகிறது.இதனால் இப்பகுதியின் காட்டு வளம் திட்டமிட்டு அழித்து ஒழிக்கப்படுவதுடன்,இங்கிருந்து கொண்டு செல்லப்படும் மரங்கள் அங்குவைத்து தளபாடங்களாக மாற்றப்பட்டு,மீண்டும் எமது பகுதிக்கே விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் மரங்கள் அங்கு எடுத்துச் செல்லப்படுவதால் தளபாட உற்பத்தியும் அங்கேயே மேற்கொள்ளப்படவதனால்,இப்பகுதித் தச்சுவேலை செய்வோர் தொழில் வாய்ப்புக்கள் இல்லாதுபோய் அவர்கள் குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகிறது. மேலும் காடுகள் அழிக்கப்படுவதனால் மழை குறைந்து, இயற்கையான பாதிப்புக்கள் வளப்பற்றாக்குறை என்பன காணப்படுகிறது.
ஆ.கடல்வளம் சூறையாடல்:
கடந்த சகாப்த காலங்களில் தென்பகுதிக்குத் தேவையான மீன் எமது பகுதியிலிருந்து 58வீதம் அனுப்பிவைக்கப்பட்டது. அண்மைக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மீன்பிடித்தடை, ஆழ்கடல் பிரதேசத்துக்கான அனுமதி மறுப்பு, பாஸ்நடைமுறைகள் என்பன மீனவரின் வருமானத்தை மட்டுப்படுத்தியுள்ளது எமது பகுதியில் ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதற்குக் கடற்படையினரின் கடைசிக் கண்பார்வை(ஆதரவு) என்பன எமது பகுதி மீனவரின் வருமானத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இ.வளமான பகுதிகள் ஆக்கிரமிப்பு:
எமது பகுதியின் வளமான பிரதேசங்கள் இனங்காணப்பட்டு, அப்பிரதேசங்கள் தமிழ்மக்கள் பாவனைக்கு உட்படுத்த முடியாதவாறு ஆக்கிரமிக்கப்படுகிறது. உயர்பாதுகாப்பு வலயங்கள், இராணுவக்குடியிருப்புக்கள், இராணுவ விவசாயப் பண்ணைகள், இராணுவ முகாம்கள் என்ற வகையில் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. இதனை அண்டிய பகுதிகளில் மக்களும் பயம் காரணமாக அப்பிரதேசங்களை விட்டுவெளியேறி தூர இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலை அவர்களுக்கு மேலும் சாதகமான நிலையை உருவாக்கியுள்ளது.
05 வேலை இல்லாத் திண்டாட்டத்தை உருவாக்குதல்:
யுத்தத்தினால் சீரழிக்கப்பட்ட வீதிகள், மதகு, பாலங்கள், அரச கட்டிடங்கள், புகையிரதப் பாதைகள் என்பவற்றை சீரமைப்பதற்காக அரசினால் பல்லாயிரம் கோடி ரூபாக்கள் செலவிடப்பட்டு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அ.கூலியாட்கள் இறக்குமதி:
பல்லாயிரம் கோடிரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கூலி ஆட்கள், ஏனைய பிரதேசங்களிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு,பயன்படுத்தப்பட்டுவருகின்றனர். கஞ்சிக்கு பயறுபோட்டது போல மிகச்சிறுதொகையினர் இப்பகுதியிலுள்ளவர்கள் பயன்படுத்தப்பட்டபோதும், மிகக் குறைந்தளவு ஊதியமே அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதி வேலைவாய்ப்பினை இப்பகுதியிலுள்ளவர்கள் பெறமுடியாத நிலையும் இங்கு வேலையில்லாத் திண்டாட்ட நிலையும் திட்டமி;ட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆ.நடைபாதை வியாபாரிகளும் நடமாடும் வியாபாரிகளும்:
இப்பகுதி வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் தெற்கிலிருந்தும் ஏனைய மாகாணங்களிலிருந்தும் வந்துள்ள நடைபாதை வியாபாரிகள் தமது பொருட்களை சுலபமாக விற்பனைசெய்து வருகின்றனர். அவர்களுக்கு மின்சாரக் கட்டணம், வரிசெலுத்தல், ஏனைய செலவுகள் எதுவுமில்லை. இதனால் சற்றுக்குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றனர். இது நுகர்ச்சியாளருக்கு சிறிது இலாபகரமாக இருந்தாலும் இப் பகுதி வர்த்தகர்களுக்குப் பாரிய நட்டத்தையும் தொடர்ந்து தொழிலை நடாத்த முடியாத நிலையையும் உருவாக்கியுள்ளது.
மேலும் சிறிய வாகனங்களின் மூலமும் கால் நடையாக காவிச்சென்றும், கிராமம் நகரமெங்கும் பொருள் விற்பனை மேற்கொள்ளும் வியாபாரிகளும் அதிகரித்துள்ளனர். இருந்த இடத்திலிருந்து பொருட்களைக்கொள்வனவு செய்யக்கூடியதாக உள்ளது என நாம் கருதிக்கொள்ளும் அதே வேளையில் அவர்களின் பின்புலம் மிகவும் ஆபத்தானதாக உள்ளதை நாம் அறியவில்லை.
வியாபாரிகள் என்ற போர்வையில் எமது பகுதியின் இயல்புகளையும் இப்பகுதி புலனாய்வுத் தகவல்களையும் அவர்கள் திரட்டிச் செல்வதை நாம் அறியமாட்டோம்.
06 மக்களை கடனாளியாக்குதல்:
மக்களின் கடன் தேவைகளுக்குப் பணவுதவி புரிந்து அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் தன்மையை அடிப்படையாகக்கொண்டே வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் வழங்க வேண்டும் என்பதே அடிப்படை எண்ணக்கருவாகும். அதற்கு மாறாக மக்களை கடனாளி ஆக்கும் செயற்பாடுகளே முன்னெடுத்து செல்லப்படுகிறது.
அ.லீசிங் (குத்தகை-வாடகை)(LEASING SYSTEM)
நிதி நிறுவனத்தின் உதவி என்ற போர்வையில் லீசிங் முறையில் தாராளமாகக் கடன் வழங்கப்படுகிறது. எவராவது ஒருவர் 5 லட்சம் ரூபா முதல் கட்டுப்பணத்தை செலுத்தி 50 லட்சம் ரூபா வாகனத்தை கொள்வனவு செய்யமுடியும். வாகனத்தைக்கொள்வனவு செய்துவிட்டு அதற்கான வருமானம் எதுவுமின்றி, மாதாந்தம் கட்டவேண்டிய கட்டுப்பணத்தையும் செலுத்தமுடியாத நிலையில் வாகனத்தையும் பறிகொடுத்து நடுத்தெருவில் நிற்கும் பல இளைஞர்களைக் காணக்கூடியதாக உள்ளது.
இது ஒரு சிறு உதாரணமாகும். இதேபோல நிதிநிறுவனங்களிடம் கடன்வாங்குதல் பொருட் கொள்வனவு செய்தல் நடவடிக்கைகளில் தாராளமாக ஈடுபட்டு பலர் கடனாளியாக உள்ளனர்.
ஆ.வீடமைப்புத்திட்டம்:
வீடமைப்புத்திட்டதின் மூலம் மீளக்குடியமர்ந்தவர்களுக்கு பணம் வழங்குதல் என்ற போர்வையில் அவர்களைக் கடனாளி ஆக்குதல்.
வீடமைக்கு 10 லட்சம் தேவைப்படும்போது அதற்கு 5 கால் லட்சம் ரூபாவை வழங்கி மிகுதி 4 முக்கால் லட்சம் ரூபாவுக்கு ஒவ்வொருவரையும் கடனாளி ஆக்குதல். பணத்தை அவர்களிடம் வழங்காமல் தாம் கொடுக்கும் பணத்தின் பெறுமதிக்கு அமைவாக அரசினரே வீடமைத்து கொடுக்கலாம் அல்லது 20 ஆயிரம் பேருக்கு பதிலாக10 ஆயிரம் பேருக்கு வீடமைத்துக் கொடுக்கலாம். ஒருவருமே கடனாளி ஆக மாட்டார்கள்.
ஆதிகால மன்னர்கள் வெள்ளையானை பரிசளித்த கதைகள் உண்டு. அரசனுக்கு எதிராக குடிமகன் ஒருவன் இருந்தால் அவனது சகல நடவடிக்கைகளும் வேவு பார்க்கப்பட்டு அவன் சிறிய சாதனை ஒன்று செய்தாலும்’அதை வெகுவாகப் பாராட்டி அவனைக் கௌரவித்து ஒரு யானையை அரசன் பரிசளித்துவிடுவான்’ அரசனால் வழங்கப்பட்ட யானையை மெலிந்துவிடாமல், இறந்துவிடாமல் அவன் கவனமாக பராமரிக்க வேண்டும். அல்லது அவன்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனது வயிற்யையே கழுவமுடியாத அந்த ஏழைக்குடிமகன் யானையை பராமரிப்பதில் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு, இறுதியில் ஒட்டாண்டியாகி இறந்துவிடுவான்.
இந்த நிலைதான் வீட்டுத்திட்டத்தை பெற்றவர்களின் நிலையும் வீட்டைப் பூரணப்படுத்துவதற்காக தன் மனைவி பிள்ளைகளின் நகைகளை விற்றும் ஏனைய சிறிய சொத்துக்களை விற்றும் கடனாளிகள் ஆகிவிட்ட நிலையே காணப்படுகிறது.
நிழல் யுத்தின்முடிவு:
ஏற்கனவே நடைபெற்ற நேரடியுத்தத்தின் மூலம், தமிழ்மக்கள் தமது சொத்துக்கள் உடமைகள் அனைத்தும் இழந்து நிர்க்கதியாகிவிட்டனர். தற்போது அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படும் இந்த மறைமுகமான நிழல் யுத்தத்தின் மூலம் இழந்தவற்றை மீண்டும் தேடிக்கொள்ளவோ,அன்றில் அவற்றைத் தேடாமலேயே ஒரு நின்மதியாக சாதாரண வாழ்க்கை வாழவோ முடியாதவர்களாகிவிட்டனர். அவர்களின் எதிர்காலம் சூனியமாகிவிட்டதென்றே கூறவேண்டும். தமிழனம் தலைநிமிர்ந்து வழக்கூடாது என்ற அரசின் கொள்ளை வெற்றியளித்துவருகிறது. தமிழினத்துக்கு அரசியல் ரீதியான அதிகாரங்களும் உரிமைகளும் கிடைக்காதவரை எதையுமே செய்யமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள்மீது தொடர்ந்து நடாத்தப்பட்டுவரும் இந்த நிழல் யுத்தம் எப்போது முடிவுக்கு வரும்? என்ற வினாக்களுக்குக் காலந்தான் பதில் கூறவேண்டும்.
இத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது என்று நாம் நினைப்போம் – இல்லை அது முடிந்து விடவில்லை – நாம் இவற்றை தைரியாமாக முன்னெடுக்கவில்லை என்று நாம் கூறவேண்டும்.
2009 இற்கு முதல் தமிழீழ விடுதலை புலிகள் என்ற மாபெரும் கட்டமைப்பு தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக இருந்தார்கள் – அவர்கள் இருந்த காலத்தில் மேற்கூறப்பட்ட விடயங்கள் நடைபெறவில்லை. அதேநேரத்தில் சிறிலங்கா அரச பாராளுமன்றத்தில் – சிறிலங்கா அரசு விடும் தவறுகளை பாராளுமன்றங்களில் பேசுவதன் மூலம் சர்வதேச அரசுகள் அறியும் வண்ணம் – தமிழ் தாயகப் பிரதேசங்களில் நடைபெறும் இன அழிப்புக்களை – சிறிலங்கா அரசின் தவறுகளை எடுத்துரைக்கும் தமிழ் மக்களின் குரலாக – தமிழ்த் தேசிய கூட்டமைப்புயை உருவாக்கினார்கள்.
2009 வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவற்றை ஓர் அளவு செய்தார்கள் என்று கூறலாம் – ஆனால், 2009இல் முள்ளிவாய்க்காலில் இன அழிப்புக்கு பின் – தமிழ் மக்களின் பாதுகாப்பு ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டபின் – தமிழ் மக்களின் குரலாக இருக்க வேண்டியவர்கள் என்று தமிழ் மக்களால் நம்பப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை பாதுகாக்கத் தவறி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.
மேற்கூறப்பட்ட நிகழ்வுகள் தமிழ் பிரதேசங்களில் நடைபெறும்போது, அவற்றைத் தடுக்க வேண்டியவர்கள் – சிறிலங்கா அரசின் காலடியில் இருந்துகொண்டு நடப்பதைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றே கூறவேண்டும். இராணுவத்திடம் இருந்து தமிழ் மக்களை, அவர்கள் நிலங்களை பாதுகாக்காமல் பார்வை ஆளர்களாக இவர்கள் இருந்தார் என்றே கூறவேண்டும். அபகரிக்கப்பட்ட காணிகளில் இன்று இராணுவம் உல்லாச விடுதிகளை கட்டி தாமே தொழில்செய்தபோது, தமிழர் நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்துகொண்டு இருந்த போது – தமிழ் பகுதிகள் சிங்களமயமாக ஆக்கப்பட்டபோது – போதை வஸ்துகள் தமிழர் பிரதேசங்களில் நடமாடியபோது – தமிழ் இனம் தொடர்ச்சியான இன அழிப்புக்கள் உட்பட்டுக்கொண்டிருந்தபோது – அது ஓர் இன அழிப்பு என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட முடியாதவர்களாக அவர்கள் இருந்தார்கள் என்பதை நாம் கண்கூடாகப் பார்த்தோம்.
தமிழ் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறும் போதெல்லாம், தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்களே என்று தேர்தல் மேடைகளின் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் – தேர்தல்களின்பின் – சிறிலங்கா அரசிடம் இருந்து – இராணுவத்திடம் இருந்து தம்மை பாதுகாத்தார்களேயன்றி, தமிழ் மக்களின் நலன்களையோ, சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளையோ அவர்கள் விடுதலை செய்யவில்லை.
சர்வதேசம் எங்கும் வாழும் தமிழ் மக்கள் 12 கோடி தமிழ் மக்களின் விடுதலை – சர்வதேச சுயாதீன விசாரணை – சுயநிர்ணைய உரிமைக்கான வாக்கடுப்பு என்று கூறியபோதும் – அந்த ஆதரவுத் தளத்தைப் பயன்படுத்தாமல் – தமது சொந்த நலன்களைப் பாதுகாக்கும் சில சர்வதேச அரசுகளின் பகடைக்காய்களாக இருந்தவாறு தமிழ் மக்களின் இன அழிப்புக்குத் துணைபோகிறவர்களாக இன்றும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
பாலஸ்தின போராட்டத்தை நாம் பார்த்தோம் ஆக இருந்தால் – பல தோல்விகளுக்குப் பின்பும் தமது மக்களை ஜனநாயகப் போராட்டங்கள் ஊடாகத் தமது தேசிய விடுதலைக்காக அவர்களின் தலைவர்கள் பலம்வாய்ந்த நாடுகளின் சொல்லுக்கெல்லாம் தலை ஆட்டுபவர்களாக இருக்காமல் தமது பக்க நியாயத்தை எடுத்துக்கூறி பாலஸ்தீனம் என்ற நாட்டின் அங்கீகாரத்தை படிப்படியாக எடுத்து முன்னகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களிடம் இன்று தமிழர்கள் என்ற பலம் இருந்தபோதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு, இந்த 6 வருடங்களில் தமிழ் மக்களை ஒரு மாபெரும் அழிவு நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதே இன்று வெட்டவெளிச்சமாகி இருக்கும் உண்மை.
இனிமேலும் நாம் தொடர்ச்சியாக இதே வழிப்பாதையில் செல்லப்போகிறோமா என்று நாம் சிந்திக்க வேண்டும் -2009 இற்குப் பின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – தமிழ் மக்களை பாதுகாக்கத் தவறியதோடு – தமிழ் மக்களை அழிவுக்கு இட்டுச் சென்று இருக்கிறார்கள் என்பதே உண்மை.
நாம் கடந்த காலத் தவறுகளில் இருந்து மீண்டு வரப்போகிறோமா- இழந்தவற்றை மீட்டு எடுக்கப்போகிறோமா – சர்வதேசத்தில் தமிழர்களின் விடுதலைக்கான குரல்களாக இருக்கப்போகிறோமா?
இவை எல்லாவற்றையும் உருவாக்க – தாயகத்தில் எம்மை ஆளுபவர்களில் ஒரு மாற்றம் தேவை – மாற்று அரசியல் கட்சிகள் தேவை – இந்த மாற்று அரசியல் குரலாக 2009இல் இருந்து தொடர்ச்சியாகத் தமிழ் மக்களுக்கு நடந்து கொண்டிருப்பது ஓர் இனப்படுகொலை – அதில் இருந்து பாதுகாக்க, தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டும், இன்றைய சிறிலங்காவில் தமிழர் – சிங்களவர்கள் என்று இரண்டு தேசிய இனங்கள் இருக்கிறார்கள் – அவர்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமை சிறிலங்காவில் இருக்கிறது என்று கூறிக்கொண்டு இருக்கும் இளைஞர்களைக் கொண்ட மாற்றுக் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் சிறிலங்காவின் பாராளுமன்றத்துக்கு சென்று தமிழர்களின் குரலாக ஒலிக்கவேண்டிய காலம் கனிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
ஒரு மாற்றம் இன்று அவசியம் தேவை – இல்லையேல் தமிழ் இனம் தமது உரிமைகளை இழந்து நிலமற்ற மனிதர்களாக வாழவேண்டிய சூழல் எமக்கு வந்துவிடும் என்பதே இன்றைய உண்மை.
இந்த மாற்றங்களை ஏற்படுத்துபவர்களாக நாம் இருந்து எமது விடுதலைக்கான பாதையை சரிநிலைப் படுத்துவோம். எமது தாயக மக்களும் இன்றைய ஆபத்தைப் புரிந்துகொண்டு இந்த புது மாற்றத்துக்குள் எம்மை இட்டுச் செல்லவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

– இறைவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here