பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி வலியுறுத்தி சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினமாகிய 26-06-2021 கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் இடையே ஸ்ரீலங்கா காவல்துறையினரால் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்ற இடைக்காலத் தடையுத்தரவும் பெற்றுக்கொள்ளப்பட்ட சம்பவமும் பதிவாகியது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் உட்பட கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – வெலிக்கடை சிறைக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு உட்பட சிறைக்கைதிகளின் உறவினர்களும் கலந்துகொண்டிருந்தனர். அதேபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியனும் இதில் பங்கேற்றிருந்தார்.
வெலிக்கடை சிறையின் கூரை மீது ஏறி தங்களது விடுதலைக்காக கைதிகள் இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையிலேயே இந்த ஆர்பாட்டமும் இடம்பெற்றிருக்கின்றது. மிகவும் அமைதியாகவும், சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றியும் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் இடையே நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்ற ஸ்ரீலங்கா காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சிறிதுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதன் போது இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் சுதேஸ் சந்திமால் கைதிகளின் உரிமைக்கான அமைப்பின் தலைவர் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று சிறைச்சாலைகளிலும் கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாகிவருகின்றனர். இன்று துமிந்த சில்வாவுக்கும், சுனில் ரத்நாயக்கவுக்கும் ஒரு சட்டமும், சிறைக் கைதிகளுக்கு இன்னுமொரு சட்டமும் காணப்படுகின்றது.
இனவாதத்தை விதைத்து, அதனை மனதிற்கொண்டுள்ள அரச தலைவரே இன்று ஆட்சியிலுள்ளார். மிருசுவில் பகுதியில் சிறுவர்களின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தவருக்கு இன்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விடுதலை அளித்திருக்கின்றார்.
இந்த அநீதிக்கு எதிராக போராடுகின்ற எம்மைக் கலைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது, இரண்டு , மூன்றுபேரானாலும் எமது போராட்டத்தை கைவிடமாட்டோம். துமிந்த சில்வா மாத்திரமா கைதியாக பார்க்கப்பட்டார்? இல்லை. அங்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை பாதுகாப்பில் இருந்தவர்களும் படுகொலை செய்யப்படுகின்றார்கள் எனவும் தெரிவித்தனர்.