சட்ட விரோதமாக காடுகள் அழிக்கப்படுகின்றன!

0
103

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பறங்கிக்கமம் பகுதியை அண்டிய பகுதியில் சட்ட விரோதமாக காடுகள் அழிக்கப்படுவதாகவும் பல ஏக்கர் காணிகள் தனி நபர்களாலும் வெளிநாட்டை சேர்ந்தவர்களாலும் அபகரிக்கப்படுவதாகவும் பறங்கி கமத்தை சேர்ந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.   

யுத்தம் காரணமாக பல முறை இடப்பெயர்வுகளை சந்தித்த தங்களுக்கு அரசாங்கத்தினால் விவசாயம் செய்வதற்கு என இரு ஏக்கர் விவசாய காணிகள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு அதற்கு தாங்கள் விண்ணப்பித்ததாகவும் விண்ணப்பித்த தங்களுக்கு வரவில்லை எனவும் தங்கள் பிள்ளைகளுக்கு வந்துள்ளதாகவும் ஆனாலும் பிள்ளைகள் வயல் செய்யவோ தோட்டம் செய்யவோ இதுவரை காணி வழங்கப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இது ஒரு புறம் இருக்க வயல் செய்ய காணி வழங்காவிட்டாலும் வாழ்வதற்கே தற்போது காணி இல்லாத நிலை உருவாகியுள்ளதாக பறங்கி கமம் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்கள் சொந்த பகுதியில் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு எமது பகுதிக்கு அருகில் உள்ள காணிகளை வழங்குவதாகவும் இதனால் எங்கள் பிள்ளைகள் திருமணம் செய்து பிள்ளைகள் இருந்தும் அவர்களுக்கு ஒரு காணியை பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர். 

அதே நேரம் இலுப்பைகடவை மற்றும் கள்ளியடி பகுதியில் சட்ட விரோதமாக பல ஏக்கர் காணிகள் அடாத்தாக பிடிக்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் ஆதாரங்களுடன் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.   எனவே விரைவில் உரிய அதிகாரிகள் நிறுவனங்கள் தலையிட்டு காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

குறித்த காடழிப்பு மற்றும் காணி அபகரிப்பு தொடர்பாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரனிடம் வினவிய நிலையில் காடுகள் அழிக்கப்படும் விடயம் தொடர்பாக வனவள திணைக்களமே கவனம் செலுத்த வேண்டும் எனவும் தாங்கள் கணிகளுக்கோ காடழிப்புக்கோ எந்த அனுமதியும் வழங்கவில்லை எனவும் காடுகள் அழிக்கப்படும் இடங்களில் நபர்களை எச்சரித்தும் எச்சரிக்கை பதாதைகளை அழிக்கப்படும் இடங்களில் பிரதேச செயலகம் காட்சிப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here