ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்தது.எனினும் அதிபர் தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை என்றும் இதனால் குறைவான வாக்குகளே பதிவாகின என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை 60 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வெற்றி
அதிபர் பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் அப்தூல் நாசர் ஹெம்மாட்டி, முன்னாள் ராணுவ தளபதி முகசன் ரஜாய் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் உசேன் காஜிஜடேஹசேமி ஆகிய 4 பேர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி சக வேட்பாளர்கள் 3 பேரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத போதும் இப்ராகிம் ரைசி வெற்றி பெற்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
சக அதிபர் வேட்பாளர்கள் வாழ்த்து
இதனை உறுதி செய்யும் விதமாக அதிபர் வேட்பாளர்களான அப்தூல் நாசர் ஹெம்மாட்டி மற்றும் முகசன் ரஜாய் ஆகிய இருவரும் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, இப்ராகிம் ரைசிக்கு தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
அப்தூல் நாசர் ஹெம்மாட்டி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் ‘‘உங்கள் நிர்வாகம் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு பெருமை சேர்ப்பதற்கான காரணங்களை வழங்குவதோடு, இந்த மாபெரும் தேசத்தின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையை ஆறுதல் மற்றும் நலனுடன் மேம்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
அதோ போல் முகசன் ரஜாய் , இப்ராகிம் ரைசிக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘கடவுளின் விருப்பப்படி, இந்த தீர்க்கமான தேர்தல், எனது மதிப்பிற்குரிய சகோதரர் இப்ராஹிம் ரைசியின் தலைமையில் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க ஒரு வலுவான மற்றும் பிரபலமான அரசாங்கத்தை நிறுவ உறுதியளிக்கிறது’’ என தெரிவித்தார்.
யார் இந்த இப்ராகிம் ரைசி?
கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஈரான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் இப்ராஹிம் ரைசி, அரசியல் சார்ந்த அனுபவம் இல்லாதவர். ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் ஆதரவாளராக நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறார்.இவர் தற்போதைய அதிபர் ஹஸன் ரூஹானியை போல ஒரு மிதவாதி அல்ல. தீவிர நிலைப்பாட்டை கொண்டவர் ஆவார். அதேவேளையில் ஊழலுக்கு எதிராகப் போராடுகின்ற நபராக தன்னை காட்டி வருபவர் இந்த இப்ராகிம் ரைசி.
இது ஒருபுறமிருக்க, இப்ராகிம் ரைசி அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் நபராக உள்ளார். 1988-ம் ஆண்டு அரசியல் கைதிகளுக்கு பெருமளவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் இப்ராகிம் ரைசிக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.