திருக்கோவில் பிரதேசத்தில் உயிரிழந்த ஆறு கடலாமைகள் மற்றும் டொல்பின் ஒன்றின் உடல் பாகமும் கரையொதிங்கியுள்ளது.
நேற்றும் இன்றும் தம்பிலுவில் , விநாயகபுரம் உமரி கடற்கரைகளில் இக் கடலாமைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒரு ஆமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சாகாமம் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவி சுற்றுவட்ட அதிகாரி ஞானரெத்தினம் பிரசாந் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடங்களுக்கு வருகை தந்த திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தன் கடலோர சூழல் பாதுகாப்பு அதிகார சபையில் அதிகாரி எஸ்.சிவகுமார் திருக்கோவில் பிரதேச கடற் தொழில் பரிசோதகர் வை.யோகதாசன் சாகாம வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரி ஞானரெத்தினம் பிரசாந் ஆகியோர் உயிரிழந்த கடலாமைகளை பார்வையிட்டனர் .
இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர் .
இலங்கை கடல் பிரதேசத்தில் கடந்த 21 ஆம் திகதி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ பற்றி எரிந்ததைத் தொடர்ந்து இதுவரை 40 க்கும் மேற்பட்ட ஆமைகளும் குறைந்தது 5 டொல்பின்களும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.