இந்த ஆண்டின் சிறந்த மனிதர்களாக எபோலா நோய்க்கு எதிராக போராடிய மருத்துவக் குழுவினரை அமெரிக்காவின் டைம் பத்திரிகை தேர்வு செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை ஆண்டுதோறும் அந்த ஆண்டின் சிறந்த மனிதரைத் தேர்வு செய்து கவுரவிப்பது வழக்கம்.
இதற்காக அதன் வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டிற்கான சிறந்த மனிதரைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு கடந்த மாதம் 19ம் தேதி துவங்கி, இம்மாதம் 6ம் தேதி வரை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 50 உலக தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் சிஇஓக்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடியின் பெயரும் இடம் பிடித்திருந்தது. வாக்கெடுப்பின் முடிவில் 50 லட்சம் வாக்குகள் பெற்று மோடி முதலிடத்தில் இருந்தார்.
ஆனபோதும், டைம் பத்திரிக்கை ஆசிரியர்கள் தயார் செய்திருந்த இந்த ஆண்டின் சிறந்த மனிதர் போட்டிக்கான இறுதி பட்டியலில் மோடி பெயர் இல்லை. இறுதி பட்டியலில் அலிபாபா குழும தலைவர்ஜாக் மா, எபோலா நோயாளிகளை கவனித்துக் கொள்பவர்கள், ரஷ்ய அதிபர் புதின், ஆப்பிள் சிஇஓ டிம் குக், பெர்குஷன் போராட்டக்காரர்கள்.
பாடகி டெய்லர் ஸ்விப்ட், தேசிய கால்பந்து லீக் கமிஷனர் ராஜர் ஸ்டோக் குடெல், குர்திஸ்தானைச் சேர்ந்த அரசியல் தலைவர் மசூத் பர்சானி ஆகியோரின் பெயர்கள் இருந்தன. இவர்களில் 2014ம் ஆண்டின் சிறந்த மனிதராக எபோலா நோயாளிகளைக் கவனித்துக் கொண்ட மருத்துவக் குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எபோலா நோய்க்கு எதிராக போராடிய அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மைய இயக்குநர் டாம் பிரடின் முதல் ஆம்புலன்ஸ் வாகன கண்காணிப்பாளர் வரை சிறந்த மனிதர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. டைம் பத்திரிகை 1927ம் ஆண்டில் இருந்து ஆண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்து அறிவித்து வருகிறது.