வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு சென்ற 61 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் கனடா செல்ல திட்டமிட்டு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் துாத்துக்குடி வழியாக மதுரை வந்து தங்கியிருந்த 2 சிங்களவர்கள் மற்றும் 21 தமிழர்கள் உள்ளிட்ட 23 பேர், இந்திய முகவர் ஒருவர் என 24 பேர், ‘கியூ’ பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கர்நாடாக மாநிலத்தில் 38 பேரும், தமிழ்நாடு மதுரையில் 23 பேருமென 61 இலங்கையர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் 29 பேர் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும் ஏனையவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கனடா நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் பெற்று, மதுரை கூடல்நகர் அசோக்குமார் என்பவர் அவர்களை மதுரை கப்பலுாரில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக, 10 நாட்களாக தங்க வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அசோக்குமார் தலைமறைகியுள்ளார். நேற்று அவரது வீட்டில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது,
அசோக் குமார் என்பவரது, சகோதரி சியாமளா தேவி, இலங்கை தாதா அங்கொட லொக்கா, கோவையில் இறந்த விவகாரத்தில், போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக கைதானவர். இவர்களின் குடும்பத்திற்கும், இலங்கை தமிழர்களுக்கும் நீண்டகால தொடர்புண்டு. அதன் அடிப்படையில், 23 பேரை சட்டவிரோதமாக அசோக்குமார் அழைத்து வந்துள்ளார். சில போலி ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளோம். அசோக்குமாரிடம் விசாரித்தால் முழு விபரங்கள் தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதேவேளை, இவ்வாறு சட்டவிரோதமாக இந்தியா சென்று மறைந்துள்ள பலரை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தமிழகத்தின் கியூபிரிவு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
நாட்டில் கொரோனா நெருக்கடி கெடுபிடிகளுக்கு மத்தியில் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவிற்கு நுழைந்த இலங்கையர்கள் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் வைத்து இந்திய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இன்னும் பலர் மறைந்திருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து இரு மாநில காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.