வறிய நாடுகளுக்கு விநியோகிப்பதற்காக 50 கோடி கொவிட்19 தடுப்பூசிகளை அமெரிக்கா கொள்வனவு செய்யவுள்ளது. 92 வறிய நாடுகளுக்கு இந்தத் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நன்கொடை குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்கவுள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இத்திட்டத்துக்காக 50 கோடி (500 மில்லியன்) பைஸர்- பயோ அன்ட்டெக் தடுப்பூசிகளை அமெரிக்கா கொள்வனவு செய்யவுள்ளது. இவற்றில் 20 கோடி தடுப்பூசிகள் இவ்வருட இறுதியில் உலகெங்கும் விநியோகிக்கப்படும் ஏனையவை 2022 ஜூன் மாதம் விநியோகிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டினால் வாங்கப்படும் மற்றும் நன்கொடையாக வழங்கப்படும் மிக அதிக எண்ணிக்கையான தடுப்பூசிகள் இவை எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான தடுப்பூசிகளை விநியோகிப்பதில் உலக நாடுகள் தத்தமது பங்களிப்பைச் செய்யுமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை 64 சதவீதமானோர் குறைந்தபட்சம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.