வட கிழக்கு நைஜீரியாவில் கொம்ப் நகரிலுள்ள சந்தையொன்றில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புகளில் குறைந்தது 49 பேர் பலியாகியுள்ளதுடன் 71 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பலியானவர்களில் அநேகர் பெண்களும் சிறுவர்களுமாவர்.
ரமழான் பண்டிகையையொட்டி அந்த சந்தையில் பெருமளவு மக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்தக் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
முதலாவது குண்டு வெடிப்பானது பாதணி விற்பனைக் கடையொன்றுக்கு வெளியே இடம்பெற்றுள்ளது. அதற்கு சில நிமிடங்கள் கழித்து அங்கு இரண்டாவது குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதால் இந்த குண்டுத் தாக்குதல்களில் சிக்கி பலியானவர்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
மேற்படி தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் உரிமை கோராத போதும் போகோ ஹராம் போராளிகளே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.