ஜி-7 , தனது 47 ஆவது உச்சி மாநாட்டை பிரிட்டிஷ் பிராந்தியமான கார்ன்வாலில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
காலநிலை மாற்றம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான அழுத்தமான சிக்கல்களைச் சமாளிப்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த உச்சிமாநாடு கார்னிஷ் கடலோர நகரமான கார்விஸ் விரிகுடாவிலிருந்து நடைபெறும்.
கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவின் தலைவர்களையும், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பர்.
அதேசயம் அவுஸ்திரேலியா, தென் கொரியா, இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவின் தலைவர்கள் விருந்தினர்களாக பங்கேற்பதுடன், இந்திய பிரதமர் மோடி தொலை தொடர்பு மூலம் மாநாட்டில் இணைவார்.
இந்த சந்திப்பு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும்.
பொருளாதார மீட்சி, நிலையான வளர்ச்சி, வர்த்தகம், பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமூக உள்ளடக்கம் மற்றும் பாலின இடைவெளியை நீக்குதல் போன்ற பரந்த அளவிலான பிரச்சினைகளை இந்த உச்சிமாநாடு உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19 தடுப்பூசிகளுக்கு சமமான அணுகலை ஊக்குவிப்பதற்கான வழிகள் மற்றும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் பங்கேற்பாளர்கள் கலந்துரையாடுவார்கள்.
குறிப்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் இதற்காக இந்த உச்சிமாநாட்டைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பல்லுயிர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் COP15 மாநாட்டிற்கும், நவம்பரில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் குறித்த COP26 மாநாட்டிற்கும் முன்னதாக ஜி7 உச்சிமாநாடு காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்தும்.
ஜி-7 உச்சி மாநாட்டை இங்கிலாந்து நடத்துவது இது ஏழாவது முறையாகும்.