தேர்தல் காலத்தில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யும் வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இனவாதத்தை தூண்டும் வகையில் பேசி மீண்டும் அளுத்கம பகுதியில் வன்முறைகளை தூண்ட சிலர் தயாராவதாக தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர் மீண்டும் இனவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
கடந்த காலத்தில் இனவாதத்தை தூண்டும் வகையில் ஆற்றப்பட்ட உரைகளினால் அளுத்கம பகுதிகளில் கலவரம் வெடித்து இன நல்லுறவுக்கு குந்தகம் ஏற்பட்டது. இவ்வாறான விபரீதங்களை தடுக்க இனவாதம் மதவாதத்தை தூண்டும் கையில் உரையாற்றுவோரை கைது செய்து நீதிமன்றத்தினூடாக 2 வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இம்முறை தேர்தலில் பொதுபல சேனவும் போட்டியிடுகிறது. அதன் செயலாளர் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். அளுத்கமை பகுதியில் பிரசார கூட்டமொன்றை நடத்தி அப்பகுதியில் கலவரம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியிலுள்ள பள்ளிகள், கடைகளை தாக்கவும் தயாராவதாக அறியக் கிடைத்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு பொலிஸாரால் கைதாவதன் மூலம் அரசியல் லாபம் பெறுவதே இவர்களின் நோக்கமாகும். இதற்கு இடமளிக்க முடியாது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இனவாத சக்திகளின் செயற்படுகள் தடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தலைதூக்க இடமளிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.