அரசியல் கட்சிகள் நடத்தும் மக்கள் பேரணிகள், வாகனப் பேரணிகளை “சூட்” பண்ணுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது அவற்றை புகைப்படம் பிடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பின் பிரகாரம் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்
மாநாட்டில் உரையாற்றும்போதே தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு ஆணையாளர் மேலும் உரையாற்றுகையில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மக்கள் பேரணிகள் வாகனப் பேரணிகளை நடத்துவது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும்.
இவ்வாறான பேரணிகளை நடத்த சட்டத்தில் இடமில்லை. எனவே இவ்வாறு நடத்தப்படும் பேரணிகளை “சூட்” பண்ணுமாறு அதாவது புகைப்படங்களை எடுக்குமாறும், நீதிமன்றங்களில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இனி இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது பொலிஸாரின் கடப்பாடாகும்.
அதேவேளை பிரதமர், முன்னாள் சபா நாயகர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களான சம்பந்தன், ஜோன் செனவிரத்ன உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து வழக்கப்படும்.
அத்தோடு மாகாணசபை முதலமைச்சர்கள், அமைச்சர்கள், தவிசாளர்களுக்கு விசேட பாதுகாப்பு எதுவும் வழங்கப்படமாட்டாது. ஆனால் தற்போது அவர்களுக்குள்ள சிறப்புரிமைகள் மீளப் பெறப்பட மாட்டாது.
எதிர்காலத்தில் 19 ஆவது திருத்தம் முழுமையாக அமுலுக்கு வந்த பின்னர் அந்நிலை மாறும்.
அதேவேளை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது. அவையனைத்தும் மீளப் பெறப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரமே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக தான் பொலிஸ் மா அதிபர், தேர்தலுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னரே தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் மரண அச்சுறுத்தல்கள் இருக்குமானால், ஏற்கனவே இவ்வாறான அச்சறுத்தல் தொடர்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்குமானால் அதனை தொடரவும், பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்கும் பொலிஸ் மா அதிபரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிரதி எனக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
அத்தோடு நாட்டில் பல இடங்களுக்கு சென்று பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் செயலாளர்களுக்கு பாதுகாப்பு தேவையென்றால் அவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
உள்ளூர் கண்காணிப்புக் குழுக்களும் மக்களது கண்காணிப்பும் தேர்தல்கள் தொடர்பில் எமது நாட்டில் சிறப்பாகவுள்ளது.
ஆனால் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தேவையென்ற தோற்றப்பாடு நாட்டில் உள்ளது. இதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் 70 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவினர் இங்கு வருகின்றனர்.
சார்க் நாடுகளை சேர்ந்த 30 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவும் வருகிறது. அதேவேளை பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் கண்காணிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
இத் தேர்தலில் பௌத்த குருமார் பலர் போட்டியிடுவதால் வாக்களிக்கும் நிலையங்களை விஹாரைகளில் அமைப்பது தொடர்பாக நெருக்கடிகள் தோன்றியுள்ளன.
எனவே 100, – 150 க்கும் இடையிலான வாக்களிப்பு நிலையங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந் நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறவில்லை.
இம்முறை 10000 க்கு உட்பட்ட இடம்பெயர்ந்தவர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்கள். வன்னியில் இடம்பெயர்ந்தவர்களே அதிகம் விண்ணப்பித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பெருமளவானோர் இல்லை.
புத்தளம் அநுராதபுரம் பிரதேசங்களில் இவர்களுக்கான வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
தபால் மூலம் வாக்களிப்பதற்காக 5,25000 பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.
அரச நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும்.
சுவரொட்டிகள் பாரிய கட்அவுட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் பொலிஸாரின் உதவியோடு முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்காக அரசாங்கமே பெரும் தொகை பணத்தை செலவிடுகின்றது. அடுத்த தேர்தலில் கட்அவுட் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தும்போது அதற்குரியவர்களே அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்பதான சட்டத்தை நிறைவேற்றுமாறு கோருவோம். எனவே எதிர்காலத்தில் அரசுக்கு செலவிருக்காது.
வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யலாம் துண்டுப் பிரசுரம் வழங்கலாம். ஆனால் ஆதரவாளர்கள் கூட்டத்தோடு இதனை மேற்கொள்வது சட்ட விரோதமாகும் என்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட்டும் கலந்துகொண்டார்.
Close