சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2021!

0
505

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட போது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 47வது ஆண்டு நினைவில் தமிழீழ மாணவர் எழுச்சி நாளானது 06.06.2021 அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில் நினைவுகூரப்பட்ட சமவேளையில் கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்பட்டுள்ள இடர்சூழலினால் இணையவழி ரீதியிலாகவும் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்டது. இணையவாயிலாக கலந்து கொண்ட இளையோர்களினால் காணிக்கை நிகழ்வுகளும் வழங்கப்பட்டன.

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க  நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவித்தலைத் தொடர்ந்து ஈகைச்சுடர்ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. 

முதற்தற்கொடையாளர் பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவு நாளாகிய யூன் 5ம் திகதியன்று உலக சூழல் நாள் அனைத்துலகமெங்கும் கடைப்பிடித்து வருவதனால் அதற்கு மதிப்பளித்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் யூன் 6ம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் பிரகடனப்படுத்தப்பட்டு, தமிழீழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதும் சிறப்பாகும்.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை மக்கள் எல்லோரும் சேர்ந்து பாடியதனைத் தொடர்ந்து, தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வுகள் நிறைவுபெற்றன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here