
கும்பகோணத்தில் எளிய குடும்பச் சூழலில் பிறந்து கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்று தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கிக் கொண்டவர் இளையராஜா.
மண்ணின் மைந்தர்களை, குறிப்பாக கிராமத்துப் பெண்களின் கவித்துவமான பேரழகைத் தன் தூரிகையால் மேலும் அழகூட்டி உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் எடுத்துச் சென்றவர்.
“இளையராஜாவின் பாணி ” (Elayaraja Style) என்ற ஒரு ஓவிய வகைமை ஒன்றையே உருவாக்கிய வித்தகர் இவர்.
தமிழகத்தில் ஒரு ஓவியன் ஓவியம் வரைவதன் மூலமே தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வசதியாக வாழ முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாக நேற்று வரை இருந்த இளைஞர் ஒருவரை இன்று இழந்துவிட்டோம்.
மிகச்சிறிய வயதில் அவர் அடைந்த உச்சம் மிக உயர்ந்தது. பழகுவதற்கு எளிமையாக; இனிமையாக; தலைக்கனமின்றி வாழ்ந்த கலைஞன் ஒருவனைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டார்.
இதையெல்லாம்விடத் தனது ஆகச் சிறந்த மாணவருள் ஒருவரை இழந்து நிற்கும் ஓவியப் பேராசான் N.S.மனோகர் அவர்களை என்ன சொல்லித் தேற்றுவது?