விதுஷனின் மரணத்திற்கு நீதி கிடைக்குமா – இரா. சாணக்கியன்!

0
636

பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ள மட்டக்களப்பு, இருதயபுரத்தைச் சேர்ந்த சந்திரன் விதுஷனின் குடும்பத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இச்சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பொலிஸார் எனக் கூறி மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்குப்பகுதி வீடு ஒன்றிலிருந்து கடந்த புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்ட சந்திரன் விதுஷன் (22) என்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அந்த இளைஞரின் இல்லத்துக்கு நேற்றுமுன்தினம் (03) விஜயம் செய்து, அவரது தாயாரைச் சந்தித்து இச்சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

இதுகுறித்து சாணக்கியன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், ‘பொலிஸாரின் காவலின் கீழ் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். அளவுக்கதிகமாக ஐஸ் போதைப்பொருளை உள்ளெடுத்தமையின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ‘அந்த இளைஞர் கைவிலங்கிடப்பட்டதுடன் தாக்கப்பட்டார். அதுமாத்திரமன்றி அவர் உயிரிழக்கும்போது பொலிஸ் காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பான உண்மையைக் கண்டறிந்து, நீதியை உறுதி செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘என்னுடைய சகோதரன் புதன்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டதுடன் எங்களுடைய வீட்டுக்கு முன்னால் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கின்றனர்’ என்று விதுஷனின் சகோதரி இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், ‘மிகையான ஐஸ் போதைப்பொருள் பாவனையால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் அந்த இளைஞரின் வீட்டுக்கு முன்னாலேயே அவர் தாக்கப்பட்டதாக அவரது சகோதரி தெரிவித்திருப்பதால், சித்திரவதை இடம்பெறவேயில்லை என்று கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ‘இச்சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணை செய்யப்பட வேண்டும். மேலும் போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் குறித்து கையாள்வதுடன் தொடர்புடைய விடயங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சிறைச்சாலைகள் தொடர்பான ஆய்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன’ என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here