வடக்கு, கிழக்குத் தமிழர்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமது வாக்குரிமையை முழு அளவில் பிரயோகிக்கும்படி வலியுறுத்தி வேண்டுவது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது. எனினும் யாருக்குத் தமது வாக்குகளை அளிப்பது என்பது பற்றிய முடிவை பின்னர் தீர்மானித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவது என்றும் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கான கூட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகலில் சுன்னாகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. அப்போதே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியா சென்றுள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்படவேண்டியுள்ளன. இரா.சம்பந்தன் எம்.பி. நாடு திரும்பியதும், கிழக்கு மாகாணத் தலைவர்களினதும் கருத்துக்களையும் உள்வாங்கி அவை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்துரையாடுவார்கள். அக்கூட்டம் பெரும்பாலும் அடுத்தவாரம் அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடவிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று பிற்பகல் சுன்னாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன், விநோநோதராதலிங்கம், சிவசக்திஆனந்தன், சுமந்திரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சபை அவைத் தலைவர், வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முதலில் வடக்கு மாகாண சபை செயற்போக்குகள் பற்றி ஆராயப்படும் என கூட்ட அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதனை அடுத்த மாதத்தில் ஆராயலாம் என முதலமைச்சர் குறிப்பிட்டதும், சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி மிகக் காட்டமாக அதைக் கண்டித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அவ்விடயம் சுமார் மூன்றுமணி நேரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. அச்சமயத்தில் சிவசக்தி ஆனந்தன் எம்.பிக்கும், சிறிதரன் எம்.பிக்கும் இடையில் தடித்த வார்த்தைப் பிரயோகத்தில் தர்க்கமும் இடம்பெற்றது.
சுமார் நான்கு மணிநேர இழுபறிக்குப் பின்னர் தற்போதைய அரசியல் நிலைமை பற்றிய விடயம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை அடுத்த வாரத்தில் கூட்டமைப்புத் தலைவர்கள் கூடி முடிவுசெய்வர் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. எனினும் இத்தேர்தலில் தமிழர்கள் தமது வாக்குரிமையை முழு அளவில் தவறாது பிரயோகித்து, தமது ஜனநாயகக் கடமையையும் உரித்தையும் நிலைநிறுத்துவதற்கு வலியுறுத்துவது என்றும் அதற்காகக் களத்தில் இறங்கி பணியாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.