முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலில் பிரவேசித்து குருநாகலில் களமிறங்கியுள்ளார். ஒரு இலட்சத்திற்கு மேலான எமது மக்களை இனப் படுகொலை செய்து இனவாதத்தை முன்னிலைப்படுத்தி நாட்டை அழித்துக் கொண்டிருந்த இவருக்கு தமிழ் மக்கள் சார்பில் எதிர்ப்பைத் தெரிவிக்கவே குருநாகல் மாவட்டத்தில் நான் போட்டியிடுகிறேன். எங்கள் மக்களை இனப் படுகொலை செய்தவருக்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னதாக எமது மக்களை இனப் படுகொலை செய்ததுடன் சரணடைந்த 18 ஆயிரம் பேருக்கு இதுவரையில் என்ன நடந்ததென்றே தெரியாத நிலைமையை உருவாக்கியவர் முன்னாள் ஜனாதிபதி. இனவாதத்தைத் தூண்டி நாட்டை அழிப்பதற்கு மெதமுலனவிலிருந்து குருநாகலுக்கு வருகை தந்துள்ளவர்களுக்கு எதிராகவே நான் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
ஜனவரி 8ஆம் திகதி இந்த நாட்டின் 62 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்ததுடன் தமிழ் மக்கள் தமது பெரும்பான்மையான வாக்குகளை வழங்கியமையாலேயே தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள்.
எனினும் இதுவரையில் எமது உறவுகள் காணாமல் போனமைக்கோ கடத்தப்பட்டமைக்கோ எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை. தமிழ் மக்களிடமிருந்து அரச படைகள் கைப்பற்றிய நிலங்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான நிலங்களே மீளக்கையளிக்கப்பட்டுள்ளன.
இன்றும் எமது மண்ணில் அரச படைகள் முகாமிட்டுள்ளன. இது தொடர்பில் புதிய அரசாங்கம் கூட எதிர்பார்த்த அளவிற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இதனை மையப்படுத்தியே எமது தேர்தல் செயற்பாடு அமையவுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்கான சூழல் வேறுபட்டுக் காணப்படுகின்றபோதும் எமது மக்களின் குரலாக அங்கு நான் இயன்றவரை செயற்படுவேன்.
15 பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தீர்மானிக்கும் குருநாகல் மாவட்டத்தில் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி நாம் களமிறங்கவில்லை. மெதமுலனவிலிருந்து இன-வாதத்துடன் வந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி போட்டியிட முடியுமென்றால் வல்வெட்டித்துறையிலிருந்து நல்லாட்சிக்காகவும் தமிழர்களின் எதிர்காலத்திற்காகவும் ஏன் ஒருவரால் களமிறங்கமுடியாது.
இலங்கை அரசாங்கத்தின் அரசியல் தீர்வில் எமக்கு நம்பிக்கை கிடையாது. சர்வதேசத்தின் மத்தியஸ்தத்தின் ஊடாகவே அதனை எட்டுவதற்கு முயற்சிக்கமுடியும். ஐ.நா.வின் மேற்பார்வையில் வடகிழ-க்கில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்த-ப்பட-வேண்டும். எங்களுடைய தலை-விதியை நாமே தீர்மானிக்கவேண்டும் என்றார்.