இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா:
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த் திரை உலகில் மாபெரும் சகாப்தமாக திகழ்ந்தவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. என்று கூறியுள்ளார். தமது ஈடு இணையற்ற இசை வல்லமையால், தமிழ் திரைப்பட உலகுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவு திரைப்படத் துறைக்கும், கலை உலகிற்கும், ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி:
தமிழ்த் திரையுலகில் தலை சிறந்த இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். வறுமை நிலையில் வாழ்க்கையைத் தொடங்கிய எம்.எஸ்.வி.யின் சகாப்தம் வியக்கத்தக்க உச்சிக்குச் சென்று முடிவடைந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாமரர்களும் இசையை விரும்பிக் கேட்க வைத்த இசையுலகின் மாமேதை என்று குறிப்பிட்டுள்ளார். சுமார் அறுபது வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பயணம் செய்த எம்.எஸ்.வி., இசையமைப்பாளராக, பாடகராக, நடிகராக திரையுலகில் முத்திரை பதித்தவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்:
இசையில் சிறந்தவன் என்ற கர்வம் இல்லாதவர் விஸ்வநாதன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இவரது மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ள ராமதாஸ், 1200 படங்களுக்கு இசையமைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதனின் திறமை நடுவண் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது தான் சோகம் என்று கூறியுள்ளார்.
வைகோ:
உலகின் தொன்மையான இசை, தமிழ் இசை என்பதை இருபதாம் நூற்றாண்டிலும் நிலைநாட்டும் விதத்தில் கலை உலகத்தில் இசைக் கருவிகளின் மூலம் நாத வெள்ளத்தைத் தேனருவியாகத் தமிழர்களுக்கு வழங்கியவர் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி. என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இசை உலகின் சிகரமாக உயர்ந்து நின்ற அவர், மண்ணுலகை விட்டு மறைந்தாலும், என் போன்றோருக்கு எந்நாளும் அவர் அருகில்தான் இருக்கிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஈ.வெ.கி.ச. இளங்கோவன்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரைப்பட பாடல்கள் உள்ளவரை எம்.எஸ்.விஸ்வநாதன் புகழ் நிலைத்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஜி.கே. வாசன்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இசை உலகில் எம்.எஸ்.வி. என்று அன்போடு அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் திரை இசை உலகில் அன்றும், இன்றும், என்றும் மறக்க முடியாதவர் என்று தெரிவித்துள்ளார். அவரது இழப்பு திரை உலகிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.